பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

77

மாறு அமைந்திருக்கிறது. இந்த வல்லிபுர ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்களுக்குத் தமிழகத்திலிருந்து பிரசித்தி பெற்ற நாதஸ்வர வித்வான்களைத் தருவிப்பார்களாம். வெண்ணிலவில் வெண் மணலில் பதினாயிரம் இருபதினாயிரம் மக்கள் திரண்டிருந்து நாதஸ்வரத்தின் இசையைக் கேட்டுப் பரவசமடைவார்களாம். இதை யெல்லாம் கேட்டபோது,

“நேற்று முன்னாளில் வந்த உறவன்றடி — இது

நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்!”

என்ற பாரதியார் வாக்கு என் நினைவுக்கு வந்தது. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் ஏற்பட்ட உறவு நெடும் பண்டைக்கால முதல் நேர்ந்து வந்த உறவு என்பதில் ஐயமில்லை. அந்த உறவின் அழியாத சின்னங்களாக இது போன்ற ஆலயங்கள் விளங்குகின்றன. இராஜராஜ சோழன் ஈழத்தை வெற்றி கொண்டு பொலன்னருவா (புலஸ்தியநகர்) என்னும் அப்போதைய தலைநகருக்கு ஜனநாதபுரம் என்று புனர்ப் பெயர் அளித்து அரசுபுரிந்த காலத்திய சிவன் கோயில்கள் இன்னமும் அந்தப் புலஸ்திய நகரில் இருக்கின்றன. இராஜராஜன் காலம் 950 வருஷங்களுக்கு முந்தியது. அதற்கும் இருநூறு வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீ சுந்தரமூர்த்தியும் இன்னும் நூறு ஆண்டுக்கு முன் ஸ்ரீ ஞானசம்பந்தரும் இலங்கையில் இருந்த சிவன் கோயில்களைப்பற்றிப் பாடியிருக்கிறார்கள். அப்படி அவர்களால் பாடப் பெற்ற கோயில்களில் ஒன்று மன்னார் தீவில் பாலாவி நதிக்கரையில் மாதோட்டம் என்னும் ஊரில் இருந்தது. இந்தக் கோயிலுக்கு அந் நாளில் திருக்கேதீசுவரம் என்று பெயர். சம்பந்தர் — சுந்தரர் காலத்தில் இந்தக் கோயில் இராமேசுவரம்