பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

81

தூய கதராடை புனைந்த ஒரு நண்பர் இனிய குரலில் அழகாகவும் தெளிவாகவும் தேவாரம் பாடினார். இன்னொரு நண்பர் மிக இனிய செந்தமிழில் வரவேற்புரை நிகழ்த்தினார். சபையோரின் முகங்களில் பண்பட்ட கல்வியறிவின் களை குடி கொண்டிருந்தது. அவர்கள் அத்தனை பேரும் ஹரிஜனங்கள் என்பது கூட்டத்தின் இறுதியில் ஸ்ரீ பேரின்ப நாயகம் சொல்லித்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்; தெரிந்து அதிசயித்தோம். இவர்களையா ஈழ நாட்டு ஆலயங்களில் விடுவதில்லையென்று ஆத்திரமும் அடைந்தோம். அப்படியானால் திருக்கேதீசுவரம் ஆலயத் திருப்பணி முதலிய கைங்கரியங்கள் என்னத்திற்கு என்றும் எண்ணமிட்டோம். கடவுள் அருளால் மறுமுறை நான் இலங்கைக்குப் போக நேருமானால், அப்போது ஈழ நாட்டில் தீண்டாமை ஒழிந்து விட்டது என்ற நல்ல செய்தியைக் கேள்விப்பட விரும்புகிறேன்.

வதிரி பள்ளிக்கூடத்தில் நிசழ்ந்த வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் அந்தப் பள்ளிக்கூடத்தின் நன்கொடையாளரான திரு. கா. சூரன் என்பவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இப்பெரியார் நந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனாரை எனக்கு ஞாபகப்படுத்தினார். ஆனால் அந்தப் பெரிய கிழவனாருக்கும் இந்தச் சூரனாருக்கும் வேற்றுமை மிக அதிகம். இவர் காந்தி மகான் மறைந்ததும் இயற்றி அச்சிட்ட ஒரு பாடல் புத்தகத்தை எனக்கு அளித்தார். அந்தப் புத்தகத்தை ஒரு பொக்கிஷமாக நான் போற்றி எடுத்துக்கொண்டு வந்தேன்.

பாடல் ஒருபுறம் இருக்கட்டும். முகவுரையில் இவர் எழுதியிருக்கும் வசன நடைக்கு ஒரு உதாரணம் பாருங்கள்:—