பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

85

கிராக்கி கிடையாது. இலங்கை சர்க்கார் தான் நமக்கு அரிசி கடன் தருகிறார்களே? அது ஒரு காலம்! இது ஒரு காலம்!

இப்படியாக எண்ணமிட்டுக் கொண்டும் விவாதித் துக்கொண்டும் பருத்தித்துறை போய்ச் சேர்ந்தோம். பருத்தித்துறை அன்பர்கள் எங்களுக்குக் காரசாரமான விருந்து அளித்தார்கள். பிறகு பாரதூரமான வரவேற்பும் அளித்தார்கள். ஆம், வரவேற்பு மிகமிகப் பாரமாகவே இருந்தது. இலங்கையையே தூக்கிக் கையில் கொடுத்து விட்டார்கள்! நல்ல வேளையாக, இலங்கையை நாலு சட்டத்துக்குள் புகுத்திக் கண்ணாடியும் போட்டிருந்தபடியால் என்னால் தாங்கமுடிந்தது! கனம் சேனநாயகா, பண்டாரநாயகா, குணசிங்கா முதலியவர்களுடைய கண்ணில் படாமல் இந்தியாவுக்கு எடுத்துக்கொண்டு வரவும் முடிந்தது! இலங்கை தேசப்பட வடிவமாக அமைந்த அழகிய சித்திரப் பத்திரத்தில் அன்பையும் இன்பத் தமிழையும் குழைத்து இனிய கவிதையாக எழுதிக் கொடுத்தார்கள். அந்தக் கவிதையில் ‘கள்வனின் காதலி’யான கல்யாணி முதல் பல கதாநாயகிகளும் கதாநாயகர்களும் பவனிவந்தார்கள். இதிலிருந்து தாய் நாட்டிலிருந்து போகும் பத்திரிகைகள் — புத்தகங்களைப் பருத்தித் துறைத் தமிழ் அன்பர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தார்கள் என்பது தெரியவந்தது. வரவேற்பு முடிந்ததும் திரு ஏரம்பமூர்த்தி எங்கள் அருகில் வந்து, “நீங்கள் பேசவேண்டியதில்லை!” என்ற பல்லவியைப் பாடினார். “நாங்கள் ஏதாவது பேசாவிட்டால் இந்த ஊர் ரசிகர்கள் எங்களை ஊமையென்று நினைத்துக் கொள்ள மாட்டார்களா?” என்றேன்.