பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

89

நடக்கப் போகிறதோ என்ற கவலை எல்லாருடைய மனதிலும் குடி கொண்டிருந்தது.

கூட்டத்தின் ஆரம்பத்தில், இந்தப் பூர்வாங்கக் கூட்டத்துக்கு ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களை ஸ்ரீ கனகரத்தினம் தலைவராகப் பிரரேபித்ததும் மேற்கூறிய கவலை அநேகமாக விட்டுவிட்டது. அனைவருடைய முகங்களும் மலர்ந்தன.

விஷயம் என்னவென்றால், ஸ்ரீ கனகரத்தினம் அரசியல் துறையில் ஸ்ரீ பொன்னம்பலம் கட்சியைச் சேர்ந்தவர். ஸ்ரீ எஸ். நடேசன் அவர்கள் அக்கட்சிக்கு மாறுபட்டவர். சென்ற தேர்தலில் நின்று தோற்றுப் போனவர்தான். ஆயினும் யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் ஸ்ரீ எஸ். நடேசனுக்கு விசேஷ மரியாதை உண்டு.

இலங்கையின் முடிசூடா மன்னராக விளங்கிய ஸர் பொன்னம்பலம் ராமநாதனின் மருகர் ஸ்ரீ எஸ். நடேசன்; பரமேசுவரக் கல்லூரியின் தலைவர். தாய் நாடாகிய தமிழ்நாட்டுக்கும் சேய் நாடாகிய வடக்கு இலங்கைக்கும் நீடித்துள்ள தொடர்பிலிருந்து விளைந்த பண்பாட்டின் கனிந்த பழம் என்று ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களைச் சொல்லுவது பொருந்தும். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பாண்டித்தியம் வாய்ந்தவர். தமிழ்நாட்டு, ஈழநாட்டுப் பழைய சரித்திரங்களை ஒப்பிட்டுச் சிறந்த ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக்கண்டு வைத்திருப்பவர். தமிழிலக்கியம், தமிழ்க் கலைகள் சம்பந்தமாக இலங்கையில் நடைபெறும் எல்லா முயற்சிகளிலும் ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு.

அரசியல் துறையிலாகட்டும், மற்ற எந்தத் துறையிலாகட்டும், தமிழ் மக்களிடையே ஏற்படும் வேற்றுமை-