பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

91


இதைத் தழுவியே மற்றும் சில நண்பர்களும் பேசினார்கள். கடைசியாக, தமிழ் விழாவை யாழ்ப்பாணத்தில் வருகிற 1951 மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்துவதென்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. பெரிய வரவேற்புக்கழகம் நியமிக்கும் வரையில் பூர்வாங்க முயற்சிகளைச் செய்வதற்கென்று அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரையும் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. இதற்கு ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களே தலைவராக நியமிக்கப்பட்டார். திரு. முதலியார் சின்னத்தம்பி அவர்களும் திரு. க. நவரத்தினம் அவர்களும் காரியதரிசிகளாக நியமனம் பெற்றார்கள்.

திரு. க. நவரத்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தலைசிறந்த கலை அன்பர்களில் ஒருவர். தமிழ்நாட்டுச் சிற்பக் கலையைக் குறித்து ஒரு பெரிய நூல் இயற்றியவர். இவர் காரியதரிசி என்று ஏற்பட்டதும் எழுந்து நின்று, “இங்குள்ள அன்பர்கள் எல்லாருப் தலைக்குப் பத்து ரூபாய் அங்கத்தினர் சந்தா கொடுத்து வீட்டுப் போகவேணும். அப்போதுதான் வேலை துவங்கலாம்!” என்று சொல்லி, அவ்விதமே வசூலிக்கவும் தொடங்கிவிட்டார். “சரியான காரியதரிசிதான்; தமிழ் விழா யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று நானும் முடிவு செய்து கொண்டேன்.

யாழ்ப்பாணத்தில் வரும் ஆண்டில் நடக்கப் போகும் தமிழ் விழாவின் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரைக் கோடித் தமிழர்களுக்கும் ஈழத்திலுள்ள இருபத்திரண்டரை லட்சம் தமிழர்களுக்கும் தொன்று தொட்டுள்ள அண்ணன் தம்பி உறவு மேலும் வலுவடைந்து ஓங்கும் என்று நம்புகிறேன்.