பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

இலங்கையில் ஒரு வாரம்

“என்ன, ஐயா, இது? முன்னெல்லாம் பதினைந்து லட்சம் தமிழர் என்று சொல்லிக்கொண்டிருந்தீரே! அதற்குள் எப்படி இருபத்திரண்டரை லட்சம் ஆயிற்று?” என்று நேயர்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதினைந்து லட்சம் என்பது இலங்கை சர்க்கார் கொடுக்கும் கணக்கு. இப்படி வேண்டுமென்றே குறைத்துச் சொல்வதாகச் சிலர் கருதுகிறார்கள். இருபத்திரண்டரை லட்சம் என்பது தமிழரசுக் கட்சித் தலைவர் ஸ்ரீ செல்வநாயகம் கொடுத்திருக்கும் கணக்கு. இந்த இருபத்திரண்டரை லட்சத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் தமிழர்களையும் ஸ்ரீ செல்வநாயகம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இப்படிச் சேர்த்திருப்பது மிகவும் நியாயமானது என்பதில் சந்தேகமில்லை. தமிழர்கள் முஸ்லிம்களானாலும் தமிழர்கள்தானே? அவர்களுடைய தாய் மொழி அரபு மொழியாகப் போய்விடாதே! தமிழ் மொழி ஒரு அற்புதமான அரவணைக்கும் மொழி. தன் நீண்ட கருணைக் கரங்களை நீட்டித் தமிழ்த் தாய் தன் எல்லாக் குழந்தைகளையும் அணைத்து ஆசீர்வதிக்கிறாள். பழைய காலத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர்கள் தமிழில் சில சிறந்த இலக்கியங்களை இயற்றித் தந்தார்கள். அவ்விதமே சமண மதத்தைச் சேர்ந்த தமிழர்களும் தமிழ்க் காவியங்களை இயற்றினார்கள். சைவர்களும் வைஷ்ணவர்களும் தமிழில் அமுதொழுகும் பாடல்களை அளித்தார்கள். ஏன்? கிறிஸ்துவர்கள் மட்டும் பின் வாங்கினார்களா? இல்லை! அழகிய தமிழில் ஸ்ரீ வேத நாயகம் பிள்ளை பல சாஹித்யங்களை இயற்றினார். “ரக்ஷண்ய யாத்ரீகம்” என்னும் மொழி பெயர்ப்புக் காவியமும் தமிழில் வெளியாகியிருக்கிறது. முஸ்லிம்களில் எத்தனை சிறந்த தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் {{hws|இருந்|இருந்திருக்கிறார்கள்!}]