பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

93

திருக்கிறார்கள்! வள்ளல் சீதக்காதியைப் பற்றியும், சீறாப்புராணத்தைப் பற்றியும் அறியாதார் யார்?

தமிழ்த்தாயின் புதல்வர்கள் எந்த மதத்தினராயிருந்தாலும் எந்த நாட்டில் வசித்தாலும் அவர்கள் 100க்கு 100 பங்கு அசல் தமிழர்களேயாவர். அவர்களுக்குத் தமிழ் மொழியில் பூரண உரிமை உண்டு. இதை இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பலர் உணர்திருக்கிறார்கள். இல்லாவிடில் ஸாஹிராக் கல்லூரித் தலைவர் ஜனாப் ஏ. எம். ஏ அஸீஸ் அவர்களும் தமிழாசிரியர் ஜனாப் கமாலுதீன் அவர்களும் அவ்வளவு லாவகமாகத் தமிழ் மொழியைக் கையாண்டு எவ்விதம் சரமாரியாகப் பொழிந்திருக்க முடியும்?

இம்முறை இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் பலர் சொற்பொழிவு ஆற்றியதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஶ்ரீ எஸ். நடேச பிள்ளை, டாக்டர் கணபதிப் பிள்ளை, பேராசிரியர் அருள்நந்தி, வித்வான் கனகசுந்தரம், வித்வான் க. வேந்தனார், மட்டக்களப்பு திரு. சின்னதம்பிபுலவர், திரு. சிவநாயகம் முதலியவர்கள் ஆற்றல் வாய்ந்த தெய்வத் தமிழ் நடையைக் கையாண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இந்த நண்பர்களுடைய பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்த போதெல்லாம் எனக்குத் தோன்றியது இதுதான்:— தமிழகத்தில் இப்போதெல்லாம் தமிழ் விழாக்கள் பல நடைபெறுகின்றன. இந்த விழாக்களுக்கு இலங்கையில் உள்ள தமிழ்ப் பெருமக்கள் சிலரையாவது அழைத்துக் கலந்து கொள்ளும்படி செய்யவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் நடத்தும் தமிழ் விழாக்கள் பூர்த்தியடைந்ததாகும்.