பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

59


இராவணன் ஏதாவது செய்தானா என்று கேட்கிறான். என் உடல் என்ன ஆயிற்றோ எனக்குத் தெரியாது. என் உள்ளம் மட்டிலும் தங்களிடமே இருந்தது என்கிறாள். இவ்வளவுக்கும் பிறகு யாரோ ஒரு ஆடை வெளுக்கும் தொழிலாளி, ஏதோ சொல்லிவிட்டான் என்ற காரணத்துக்காக, முழு கர்ப்பவதியாயிருக்கும் சீதையை தண்டகாருண்யம் அனுப்பிவிடுகின்றான். இது இராமனுக்கிருந்த கருணையின் தன்மையா? இதேபோல் பல உதாரணங்களைக் காட்டலாம். ஆரியர்க்கும் நமக்கும் உள்ள நாகரீக வேறுபாடுகள் பலவிடங்களில் தொக்கி நிற்பதைக் கம்பன் காட்டுகிறான். ஆரியர்கள் காதலுக்காகவோ, இன்ப நுகர்ச்சிக்காகவோ, ஒற்றுமை பண்பாட்டுக்காகவோ திருமணம் செய்துகொள்வதில்லை. மக்கள் பேறு ஒன்றைக் கருதியே திருமணம் செய்து கொள்ளுகின்றார்கள். புத்திரர்கள் இல்லாவிட்டால் 'புத்' என்னும் நரகத்துக்குப் போய்விடுவார்களாம். ஆகையாலேதான் எப்படியும் புத்திரர்கள் பெற்று தீரவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் முதல் திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு புத்திரப்பேறு இல்லையானால் இரண்டாவது திருமணம், அவளுக்கும் குழந்தைகள் பிறக்கவில்லையானால் மூன்றாவது மனைவி, இப்படி குழந்தைகள் பிறக்கும்வரை எத்தனை மனைவி மார்களை வேண்டுமானாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இந்தப் பட்டியலில் முதலிடம் பெறுபவன்தான் தசரதன், ஏன்? பாண்டவர்களை எடுத்துக்கொண்டாலும் அதே கெதிதான். பாண்டுவே தன் மணைவி குந்தியை அழைத்துக் கீழ்வருமாறு சொல்லுகிறான்.