பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 99


சுத்த அம்போக்கு மனுஷன். அவ்வளவுதான் நான் சொல்லுவேன். அப்புறம் உங்க இஷ்டம்.”

“எங்க இஷ்டமுன்னு தெரியுதுல்லா, பிறகு எதுக்குய்யா கிளிப்பிள்ள மாதிரி சொல்லிக்கிட்டே இருக்கியரு: ஒம்ம வேலய பாத்துக்கிட்டு போவீரா...”

கம்பவுண்டர் மணி போனான். தனக்கு அங்கே வேல இல்லை என்பதைப்போல் போய்விட்டான். ராமபத்திரன் எல்லோரையும் அதட்டுவதுபோல் பார்த்தார். பெண்கள் உடைமாற்றப் போனார்கள். ஆண்கள் கை கழுவப் போனார்கள். அந்த வீட்டுக் கிழவர் மட்டும் எதுவும் புரியாமல் எதிர்த்துப் பேசவும் முடியாமல், மணிமேகலையைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக இருந்தார்.

ஒரு மணி நேரத்தில் எல்லோரும் ரெடியானார்கள். மாமியார்க்காரி, மணிமேகலையைப் பார்த்து ‘வீட்ட பாத்துக்கம்மா’ என்றாள் எதுவும் நடவாததுபோல. மணிமேகலையும் தான் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில் “சமைச்சு வைக்கட்டுமா?” என்றாள். உடனே லட்சுமி பதறியடித்து “திருவள்ளுர்லயே சாப்பிட்டுட்டு வந்துடுறோம். பாவம் ஒனக்கு எதுக்குச் சிரமம்?” என்றாள்.

எல்லோரும் காரில் ஏறிக்கொண்டார்கள். கிழவர், பேசாமல் உட்கார்ந்திருந்தார். ராமபத்திரன் வந்து “ஒமக்காகத்தான் மச்சான் டாக்டர்கிட்டயே கூட்டிக்கிட்டு போறேன். நீரு நூறு வருஷம் வரைக்கும் வாழ வேண்டாமா?” என்று ராகம் போட்டுச் சொல்லிக்கொண்டே, அவரது கையைப் பிடித்து ஆளைத் துக்கினார். கிழவர் ஒரேயடியாகத் தலையாட்டிவிட்டார்.

“விடும்வே... விடும்வே... ஒம்ம கை என்மேல படப்படாது. விடும்வே. பாழாப் போற காளியம்மா