பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 101


முதுகிலும் புறநாநூற்று வீரன்போல் குத்திக்கொண்டே, அவளைத் தரதரவென்று கால்கள் தரையில் படும்படி இழுத்து காருக்குள் தொப்பென்று போட்டான். அவள் கதறக் கதற, அந்த சத்தத்தை அடக்குவதுபோல், கார் சத்தம் போட்டது. அங்கே அப்போது வந்த வசந்தியும் காரில் ஏறிக்கொண்டாள். வழியில் இறங்குகிறாளோ வழிகாட்டப் போகிறாளோ?

வரவேற்பு அறைக்கு முன்னால் கைக்குழந்தையுடன் காரையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள் மணிமேகலை. ஜெயராஜ் திடீரென்று காரை ‘ஆப்’ செய்துவிட்டு, மணிமேகலையை நெருங்கி குழந்தையைப் பிடித்தான். பிறகு இழுத்தான்.

மணிமேகலை ஒரு கணம் யோசித்தாள். கொடுக்கலாமா, வேண்டாமா? கொடுத்துடலாம். பிள்ளையாவது, தன் பிள்ளை என்கிற ஞாபகம் இருக்கே!

ஜெயராஜ், தன் மகனுடன் காருக்குள் போய், அண்ணன் அமர்ந்த இடத்தில் உட்கார அவன் டிரைவர் இருக்கையில் உட்கார, இதனால் கணவனருகே இருந்த லட்சுமி பின்னால் வர, பின்னாலிருந்த வசந்தா, ஜெயராஜின் அருகே வர, கார் புறப்பட்டது. நிற்காமலே புறப்பட்டது.

இந்திரா ஏங்கி ஏங்கி அழ, பலவந்தமாக பிடுங்கப்பட்ட பையன் கதற, கார் போய்விட்டது.

காரையே வெறித்துப் பார்த்தாள் மணிமேகலை. மனிதர்கள் இப்படி மாறிவிட முடியுமா? அன்பு, பாசம் என்பது போலிதானா? அவள் ஆகாயத்திற்குள் ஒளிந்து கொள்ளப் பார்த்தாள். பாதாளத்திற்குள் பதுங்கிக் கொள்ளப் பார்த்தாள். கைகால்கள் வேர்த்தன. உச்சந்தலை வலித்தது. உணர்வுகள் நெஞ்சுள்ளே கனத்தன.