பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 107


பேசவில்லை. இந்திரா மட்டும் சங்கரனை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொண்டே, அண்ணியின் கையை ரகசியமாகப் பிடித்தாள்.

படுக்கை அறைக்கு வந்த ஜெயராஜ், ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு பெட்ஷீட்டை எடுக்கப் போனான். மணிமேகலை புரிந்துகொண்டாள். அவன் கையிலிருந்து அதை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு கட்டிலில் படுக்கப் போட்டிருந்த பையனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். ஜெயராஜ் உள்ளேயே இருந்தான். இப்போது காற்று அங்கே நல்லா வீசுதாம்.

வராந்தா பக்கம் வந்து சிறிது தயங்கிய மணிமேகலை, வீட்டு காம்பவுண்ட் சுவர் மூலையில் இருந்த அறையை நோக்கிப் போனாள். முன்னாளைய சமையலறை. வீட்டுக்கு ‘கேஸ்’ வந்த பிறகு, தட்டுமுட்டுச் சாமான் களோடு உபயோகமில்லாத பொருட்கள் உள்ள அறை. மணிமேகலை, அந்த உபயோகமில்லாத பொருட்களை ஒரு ஓரத்தில் குவித்துவிட்டு தானும் தன் மகனுமாக இன்னொரு மூலையில் போய் படுத்துக் கொண்டாள். அவளுக்கு அழுகை வரவில்லை. உணர்வு உள்ளோருக்கே அழுகை வருமாம்.

நாட்கள் நகர நகர, மணிமேகலை அவர்களிடம் இருந்து நகர்ந்தாளோ இல்லியோ நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தாள். டாக்டரிடம் இருந்து வரும்போது, இழவு விழுந்தது போல் வந்தவர்கள், இப்போது அவளையே இழவெடுக்கத் துவங்கினார்கள். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையும், விதவிதமான கலர் மாத்திரைகளோடு வரும் அவர்கள், அவளையும் விதம் விதமாக அதம் செய்தார்கள்.

ஒருநாள், இந்திரா கிசுகிசுத்தாள்.