பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 99


இருக்கிறாள். மணிமேகலைக்கு எந்தக் குறையையும், யாரும் குறைவாக வைக்கவில்லை.

ஒருநாள் அந்த வீட்டுக் கிழவர் ஒரு புரட்சியை செய்தார். அதில் அதிகமாக ஆடிப் போனவள் மணிமேகலைதான்.

கிழவரை பாமா வந்து சாப்பிடக் கூப்பிட்டாள். ‘உம்’ என்றுதான் சொன்னார். லட்சுமி வந்து கூப்பிட்டாள். “சோறு வேண்டாம்” என்றார். சங்கரன் வந்து “பசிக்கலியா?” என்றார். “பசிக்குது. ஆனால் சாப்பாடு வேண்டாம்” என்றார், இறுதியாக கிழவி வந்தாள்.

“ஒமக்கு வாலிபம் திரும்புதாக்கும். கல்யாணமான புதுசுல எங்கய்யா வீட்டுக்கு தீபாவளிக்கு போயிருந்தப்போ, நல்ல வேட்டியா எடுக்கலன்னு சாப்பிடாமக் கிடந்திரே அந்த புத்தி வந்துட்டாக்கும்.”

“எனக்கு புத்தி வரவுமில்ல. போகவுமுல்ல. ஒங்களுக்குத்தான் ஒரு நாளைக்கி ஒம்பது புத்தி.”

“சரி சாப்பிட வாரும்.”

“சரி! மணிமேகலய சாப்பாடு கொண்டுவரச் சொல்லு.”

“ஒமக்கென்ன பைத்தியமா?”

“எதுக்கு அனாவசியமான பேச்சு. இனிமேல் இந்த கட்ட உயிரோட இருக்கது வரைக்கும், என்னோட இளைய மருமவள் கையாலதான் சாப்புடுவேன்.”

வேடிக்கை பார்ப்பதுபோல் சின்னவர்களும், வெகுண்டவர்கள் போல் பெரியவர்களும் அங்கே கூடினார்கள். கிழவர் வெகுண்டு பேசினார்.

“நானும் பார்த்துக்கிட்டுதான் வாரேன். கொடுமைக்கும் ஒரு அளவு வேண்டாமா ? அவளுக்கு நோய்