பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 ★ இல்லம்தோறும் இதயங்கள்


ரயிலும் விம்மிக்கொண்டே ஓடியது. மணி விலகிக் கொண்டான். கம்பார்ட்மெண்டில் இருந்த ஒரு கிழவி, இன்னொரு இளம் பெண்ணிடம் "பார்த்தியாடி புருஷன் பெண்டாட்டின்னா இப்படில்லா இருக்கணும். நீயும் இருக்கியே, ஒன் புருஷனும் இருக்கானே?" என்றாள்.

மணிமேகலை தலை நிமிர்ந்தாள். நிமிர்ந்த வேகத்திலே குனிந்தாள்.

அட கடவுளே! வீட்டுக்காரன் வெளியாளாய் மாறினால் வெளியாள் வீட்டுக்காரன் மாதிரி தெரியமோ?

11

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இறங்கிய மணி மேகலைக்கு, ஏற்கனவே பார்த்திருந்த எல்லாப் பொருள்களும், எல்லா இடங்களும், இப்போது மாறுபட்டவையாகத் தெரிந்தன. அந்த ரயிலையும், அதனைச் சம்பந்தப்படுத்தி ஏற்பட்ட எண்ணமும்அதாவது அவளும், தம்பியும், வெங்கடேசனும் சிறுவர் சிறுமிகளாக இருந்தபோது விளையாடிய ரயில் விளையாட்டும், ரயில் சினேகிதம் போல் தோன்றியது. அந்த ரயிலைப் பார்த்தால், ஏதோ ஒரு அரக்கன்போல தெரிந்தது. பச்சைக்கொடி பாடை போலவும், ஜனநெரிசல், மனநெரிசல் போலவும் தோன்றின. முன்பெல்லாம் லெட்டர் போட்டுவிட்டு ஊருக்கு வரும்போது தம்பி வந்து வரவேற்பதும் புன்னகை தவழ புத்துலகுக்குள் நுழைபவள் போல அவள் ரயிலை விட்டு இறங்காமல் படியில் நின்றுகொண்டே தம்பியிடம் பேசுவதும் பழங்கதையாய் போனவள்போல் ரயில் பெட்டியில் இருந்து இறங்கினாள். ஒரேயடியாய் இறங்கிவிட்டாள்.