பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 ★ இல்லம்தோறும் இதயங்கள்


"என் ராசாத்தி! பட்ட காலுலயே படுங்கறது சரியாய் போச்சே சரியாப் போச்சே! இந்தச் சமயத்துலயா ஒனக்கும் வரணும்?" என்று அவள் சொன்னபோது, நடப்பது தெரியாமல் நடந்து, கேட்பது தெரியாமல் கேட்டு, பேசுவது தெரியாமல் பேசி, எதிரே இருப்பவை கூட என்னவென்று தெரியாத பார்வையுடன் நின்ற மணிமேகலை சிறிது தன்வசமானாள். சிறிது சிந்தித்தாள். "பட்ட காலுலயே. இந்தச் சமயத்துலயா..." பாட்டி என்ன சொல்கிறாள்? மணிமேகலை ஊரில் கால்வைத்த பிறகு முதல் தடவையாக உணர்ந்து பேசினாள்.

"என்ன பாட்டி சொல்ற?" "என்னத்தச் சொல்ல ? சொன்னாலும் தீராது, சொல்லியும் மாளாது!"

"நான் கிடக்கேன் விடு. இங்கு என்ன நடந்தது? சொல்லு பாட்டி!"

"சொல்லித்தான் என்ன செய்ய? சொல்லாம என்ன செய்ய? ஒய்யா.எறும்ப பாத்தாக்கூட, மிதிக்காம விலகிப் போற மனுஷன்."

மணிமேகலை துடித்தாள்.

"ராசய்யா மாமா! நீங்களாவது சொல்லுங்களேன். பாட்டி என்ன சொல்றாள் ?”

"ஒனக்கு விஷயம் தெரியாதாம்மா ?” "எனக்கு எதுவுமே தெரியாது. சீக்கிரமா சொல்லும் மாமா"

"ஓங்க அப்பாவுக்கு வாதமா, ரத்தக் கொதிப்பான்னு தெரியல. போனமாசம் கைகாலு முடங்கிப் போச்சி. வாயும் கோணிப்போச்சி. ஒரு காலும், ஒரு கையும் சுத்தமா செத்துப்போச்சி. உடம்புல உயிரு இருக்கத, வயிறு மேலயும் கீழேயுமாய் போறத வச்சிதான் தெரிஞ்சிக்கிடலாம்."