பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ★ இல்லம்தோறும் இதயங்கள்


கண்டுகொண்டதுபோல் 'ஆ.ஆ..' என்று எழுத முடியாத ஒரு ஒசையை மாபெரும் இலக்கியம்போல் வெளியிட்டது. மகளை பாதாதிகேசம் பார்ப்பது போல, அந்தக் கண்கள் மேலும் கீழுமாக நகர்ந்தன. பிறகு பக்கவாட்டில் உருண்டன.

ஆங்....ஆங்....ஆங்...

என்ன சொல்கிறார்? எதைச் சொல்ல விரும்புகிறார்?

'வந்துட்டியா மகளே என்கிறாரா? இனிமேல் நிம்மதியாய்ச் சாவேன் என்கிறாரா? என்னை இப்படி விட்டுட்டு எப்படிம்மா போவேன்னு சொல்கிறாரா? 'சுகமாயிட்டுன்னு ஒரு சொல் சொல்லும்மா, நான் மகமாயிகிட்ட போறேன்னு சொல்லப் பார்க்கிறாரா? அவளைத் தோளில எடுத்த கை-தூளியிலே போட்ட கை-'கைகொடுக்காமல்' போய்விட்டதே என்று கலங்குகிறாரா? இப்போது ஏன் வாசல்படியில் நிற்கும் மகன்களைப் பார்த்துட்டு மகளைப் பார்க்கிறார்? அவளை கை விட்டு விடாதீங்கடா என்கிறாரா? வந்ததே வந்துட்ட, என்னை எமன் வந்து கூட்டிக்கொண்டு போவது வரைக்கும் இங்கேயே இரு மகளே என்கிறாரா? கவலப்படாதே கண்மயிலே! நான் செத்து மடிந்தாலும், சிவலோகம் போகாமல் ஒன்னையே சுத்திக்கிட்டு இருப்பேன்னு இதயம் நினைப்பதை எடுத்தியம்பப் பார்க்கிறாரா? என்ன சொல்கிறார்? எதைச் சொல்லப் பார்க்கிறார்!

ஆங்...ஆங்...ஆங்...

சுற்றி நின்ற கூட்டம், மணிமேகலையையும் அந்த மாளாத பிணத்தையும் மாறி மாறிப் பார்த்தார்கள். யாருக்கும் பேச நாவில்லை. அவர்களே ஆறுதல் வேண்டுபவர் போல் அனாதரவாய் நின்றார்கள். கடைசியில்