பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 129


ஒவ்வொருவராக கலைந்து கொண்டிருந்தபோது, "அன்னம் தண்ணி இறங்கமாட்டக்கு... அப்படியும்..." என்று அண்ணிக்காரி இழுத்தபோது, அவள் எதைச் சொல்லப் போகிறாள் என்பதைப் புரிந்தவன் போல் "ஒன் தோல் வாய வச்சிக்கிட்டு சும்மாக் கிட" என்றான் புருஷன். அவள் வாய் சும்மா கிடக்கவில்லை. "இன்னா, பழயபடியும் சுரண இல்லாம போயிட்டத பாரு. இனும ஒன்ன மாதுரி வேற நெருக்கமானவங்கள பாத்தாத்தான் பழையபடியும் கண்ணு உருளும். அதுவரைக்கும் இப்படித்தான். போன வாரம் எங்க அய்யா வந்திருந்த சமயத்துலயும் கண்ணுல தண்ணி வந்துது” என்று உண்மையில் பொய்யைக் கலப்படம் செய்தாள்.

மணிமேகலை அப்பாவை உற்றுப் பார்த்தாள்.

அண்ணி சொன்னது போல அந்த உருவம் அசையாமல் இல்லை கண்கள் இன்னும் உருண்டு கொண்டு தான் இருந்தன. உதடுகள் துடித்துக் கொண்டுதான் இருந்தன. அவள் அசையும் இடமெல்லாம் அந்தக் கண்கள் அசைந்தன. நோக்கும் இடத்தையெல்லாம் நோக்கின.

எல்லோரும் போய்விட்டார்கள். சந்திரன் தோப்பருகே போய்விட்டான். அண்ணனை அண்ணி சமையலறைப் பக்கம் சாடுவது, ஒரு ஸ்டுலில் உட்கார்ந்து அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலைக்குக் கேட்டது.

"ஒண்னுமில்லாம வந்திருக்கா பார்த்தியரா? வந்தா வரட்டும். அவள் போவையில வாயும் வயிறுமா இருந்தேன். ஒங்க பிள்ள எப்படி இருக்கான் அண்ணின்னு ஒரு வார்த்த சொல்றாளா பாத்தியரா? இந்த கிழவன யாரும். ஒம்மப் பாத்து, இப்ப துடிச்சது மாதுரி எப்பவாவது துடிச்சாரா? தனக்குத் தனக்குன்னா, தாழி குடமும், பதக்கு பிடிக்குமாம்” என்றாள்.