பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 135


லிஸ்டில் முதலில் வந்தது. எங்கும். எதிலும் அவனுக்கு பாமாதான். அப்பா? அக்காள்? அதுதான் எங்கும் எதிலும் அந்த பாமா நிற்கிறாளே!

காலையில் கண் விழித்ததில் இருந்து இரவில் கண் மூடும் வரைக்கும் மணிமேகலை பெரும்பாலும் அப்பாவின் அருகிலேயே இருந்தாள். அவரது உடம்பும் லேசாக அசைவதுபோல் தெரிந்தது. பலாச்சுளை அடுக்குப்போல, வாழைப் பூ நெட்டுக்கள்போல, எண்ணத்திற்கு மேல் எண்ணமாகக் குவிந்த அவள் உள்ளத்தில் மகனின் நினைவு ஊடுருவி நின்றது. தகப்பனிடம் தாய்போல் நடந்த அவள், குழந்தையை நினைத்து குழந்தைபோல் கேவினாள். 'அம்மாங்க. அம்மாங்க' என்று அழுதுகொண்டிருப்பான். அவர் அடக்க முடியாமல் அடித்திருப்பார். என் பிள்ளை எப்படித் துடிக்கிறானோ? கண் கலங்கி நிற்கும்போது தன் மோவாயைத் தூக்கி முத்தமிடும் என் செல்ல மகன் எப்படி அழுகிறானோ? எப்படித் தவிக்கிறானோ? நான்கூட அவனை சில சமயம் அடிச்சிருக்கேனே. என்னால எப்படி அடிக்க முடிஞ்சுது! இப்போ எப்படி இப்படி இருக்க முடியுது? மணிமேகலை தோப்புப் பக்கமாக வெறித்துப் பார்த்தாள்.

பசு மாடு தன் கன்றை நக்கிக்கொண்டிருந்தது. கூடு கட்டிய காகம், கூட்டுக்குள் குஞ்சுக்கு எதையோ கொடுத்துக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. பத்துப் பன்னிரண்டு குஞ்சுகளுடன் வலம் வந்த கோழி, வீட்டுப் பூனையைப் பார்த்துக் கொக்கரித்தது. தூரத்துப் பாதையில் தெரிந்த பன்றி பின்னால் இடைவெளி போட்டு வந்த தன் குட்டிகள் வந்து சேருவது வரைக்கும் காத்து நின்றது.

மாட்டிலும், கோழியிலும், பன்றியிலும் மோசமாகப் போயிட்டேனே! உயிர்கொல்லி பூனையையே துரத்தும் கோழி மாதிரி, வசந்தி கொண்டுபோன பிள்ளையை வாங்காமல் வந்துட்டனே! அதோ அந்தப் பன்றிகூட,