பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 ★ இல்லம்தோறும் இதயங்கள்


பேசினான். ஹிப்பி மாதிரி தொங்கிய முடியை தட்டி விட்டுக்கொண்டே பேசினான்.

"நாளைக்கி நம்ம பத்ரகாளியம்மன் முன்னால ஹரிச்சந்திரனோட மயான காண்டத்த போடுறேன். அம்மா கண்டிப்பா வரணும். இது மத்த கூத்தவிட புது சான கூத்து. வெட்டியான் வேலை பாக்கும் ஹரிச்சந்திரன், அங்கே தனியாக் கிடந்துவிட நோய் சொறிந்து செத்துப் போன மகனைத் துக்கிக்கொண்டு காசில்லாமல் அவனோட மன்றாடச்சே, அவன் 'பெண்ணே ! ஒன் தாலியைத் தரக்கூடாதான்’னு கேட்பான். உடனே சந்திரமதி கணவனுக்கு மட்டும் தெரிய வேண்டிய இந்தத் தாலி இந்தப் புலையனுக்கும் தெரிஞ்சுட்டே விதியே! விதியே! என்று ஒரு பாட்டுப் பாடுவாள். இப்படித்தான் எல்லாரும் கூத்துப் பண்ணுதாங்க. ஆனால், நான் புதுசாயும் மனோதத்துவப்படியும் பண்ணப்போறேன்.

'புலையன் பார்த்துட்டானேன்னு' ஒரு பத்தினிக்கு தன்மீதே சந்தேகம் வரப்படாது. தன் தாலிமீதே சந்தேகம் வரப்படாது. அதோட புலையன்னு கேவலமா அவள் நினைச்சால் என்னப் பொறுத்த அளவுல அவளுக்குப் பட்ட கஷ்டம் பத்தாது. அவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு, அவளுக்கு ஜாதி வித்யாசம் தெரிஞ்சிருக்காது. ஏன்னா, ஜாதி என்கிறதே தப்பு. அது இன்னும் இருக்குது மகா தப்பு."

"அதனால என்னோட ஹரிச்சந்திரன் 'கையில் ஒன்றுமில்லை என்று பொய் புகல்கிறாய் பெண்ணே. பொய் புகல்கிறாய். கணவனைப் பற்றிக் கேட்டபோது கண்ணிர் விட்ட காதகியே! ஒன் கழுத்தில் தாலி இருக்கிறதே, எப்படி இருக்கிறது? இதைப் போட்டவன் யார்? கை விட்டானா ? ஒன் மெய்யைத் தொட்ட அந்த பொய்யன் போய்விட்டானா ? புகல்வாய் பெண்ணே,