பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 ★ இல்லம்தோறும் இதயங்கள்


இவனும் தனக்குக் கல்யாணம் ஆவதற்குரிய வழியைப் பார்ப்பான் என்று எண்ணி, சற்று திருப்திப்பட்டுக் கொண்டாள். பிறகு தம்பியின் கைகளை எடுத்து, தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டே "அவள் கிடைக்காமல் போனதும், ஒரு வகையில் நல்லதுக்குத்தாண்டா. சினிமாக்காரின்னு அண்ணி சொன்னதுல பாதியாவது சரியா இருக்கும். நான்கூட கேட்டேன். பெரியவங்க எதைக் காட்டினாலும் கட்டுவேன்னு என்கிட்டயே சொன்னாள். நல்ல வேளையா, ஆரம்பத்துலேயே அவள் சுயரூபம் தெரிஞ்சுபோனது நல்லதாப் போச்சு. ஒனக்கு பொண்ணா கிடையாது? விடுடா! எனக்கு வந்த நோயி, ஒனக்கும் வந்துடுமோன்னு பயந்துட்டாள். இவ்வளவுக்கும் படிச்சவள். விடுடா !”

சந்திரன் விட்டான். அக்காளின் கைகளை விட்டான். பாமாவின் 'சுய ரூபத்தை' பார்க்க முடியாமல் போனதுக்கு அக்காதான் காரணம் என்பதுபோல், அவளையே பார்த்தான். நெடிய மெளனம்; கொடிய பார்வை.

மணிமேகலை தன்னை சமாளித்துக்கொண்டே பேசினாள்:

"இப்போ அப்பா இருக்கிற நிலையைப் பாரு. ஏதோ ஒரு மாத்திரை இருக்காமே, ரெண்டு ரூபாயாம். அதை எதுக்குடா நிறுத்தினிங்க? நம்மை பெத்து வளர்த்தவருடா அவரு. இப்பவே போய் ஒரு மாதத்துக்கும் சேர்த்து மாத்திரை வாங்கிட்டு வாடா போடா! நம்ம அப்பாவை விட யாருடா உசத்தி? இந்த பாமா போனால், இன்னொரு பிரேமா கிடைப்பாடா, போய் மாத்திரை வாங்கிட்டு வாடா!”

சந்திரனால் பொறுக்க முடியவில்லை. இவள் அமரக் காதலின் மகத்துவம் தெரியாத மண்ணாங்கட்டி இந்தக் காதல் அமரத்துவம் பெற்றதுக்கு இவளே காரணம்;