பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 145


இவளுக்கு-இந்த நோயாளிக்கு-தான் தம்பியாகப் பிறந்ததே காரணம். இனிமேலும், அவளுக்குத் தம்பியாக இருக்கப் போவதில்லை என்பதுபோல் கத்தினான்.

"போக்கா ஒன் வேலய பார்த்துட்டு! எந்தச் சமயத்துல என்ன பேசணுமுன்னு தெரியல. எதைச் சொன்னாலும், அதுக்குன்னு ஒரு வேளா வேளை வேண்டாம் ஒனக்கு சாகப்போறவரு பெரிசாயிட்டாரு. வாழப் போறவன் சிறிசாயிட்டான். பேசாமல் போ! இல்லன்னா எதையாவது சொல்லிடப் போறேன்."

மணிமேகலை சிறிசாயிட்ட தம்பியையே பார்த்தாள். இவன் தம்பியல்ல. சொந்த அப்பனின் நோயைப் பற்றியோ, அவர் இருந்தும் இறப்பவராய் இருப்பதைப் பற்றியோ கவலைப்படாதவன்; அப்பனுக்குப் பிள்ளையாகாதவன், அக்காளுக்கு எப்படித் தம்பியாவான்?

மணிமேகலை தனது முன்னாள் தம்பியைப் பார்க்காமலே, வீட்டருகே வந்தாள். அண்ணன்காரன், மனைவிடம் கை, கால்களை காட்டிக்கொண்டிருந்தவன், தங்கையைப் பார்த்துவிட்டு, வேட்டியை இழுத்துப் போட்டான். மணிமேகலை எதையும் கவனிக்கவில்லை. அப்பாவுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும். அவர் எழுந்து உட்காருவதைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான் குறிக்கோள்.

குறிக்கோளில் குறி வைத்தவள்போல், அவள் அப்பாவைப் பார்த்துக்கொண்டே அண்ணனிடம் பேசினாள்.

"அப்பாவுக்கு முன்ன கொடுத்த மாத்திரையை எதுக்காவ நிறுத்துன அண்ணே? ஊர்ல நாலுபேரு நாலு விதமா பேசும்படியாவா நடந்துக்கது? அப்பா, நீ பிறந்த போது எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாரு. நினைச்சிப் பார்த்தியா?”