பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                          சு. சமுத்திரம் + 13

எனக்கு டய்பாய்டு வந்தது. அப்போதுகூட நான் பரிட்சை எழுதணுமுன்னேன். அண்ணிதான் 'உடம்புக்கு பரிட்சை வைக்கப்படாதும்மா... டய்பாய்டு திரும்பி வந்தால் தடபுடலா வருமுன்'னு சொல்லி தடுத்திட்டாங்க. இப்போ நினைச்சாக்கூட எனக்கு அழுகையா வருது."

  சந்திரன், அவளை அனுதாபத்துடன் பார்த்தபோது, மணிமேகலை "என்னடா அப்படிப் பார்க்கிற? நமக்கும் இப்படி ஒரு சாக்குக் கிடைக்கலியேன்னு பார்க்கிறியா?” எனறாள்.
  மூவரும், போர்ட்டர் முன்னால் நடக்க, பின்னால் நடந்தார்கள். திடீரென்று ரெயில் நிலையத்தின் நுழை வாயிலில் நின்ற மணிமேகலை, அந்த ரயிலையே கண் கொட்டாது பார்த்தாள். சந்திரன், அவள் மெளனத்தைக் கலைத்தான்.
  "என்னக்கா... கூட்ஸ் வண்டிமாதிரி நிற்கிற?"
  "டேய், இந்த ரயிலைப் பார்த்ததும் எனக்குப் பழைய ஞாபகம் வருதுடா. நாம் ரெண்டுபேரும் அப்புறம் காமாட்சி, வெங்கடேசன் எல்லாருமே சின்னப்பிள்ளையாய் இருக்கையில ரயில் விளையாட்டு விளையாடுவோம். ஒருநாளு ஒனக்கும் எனக்கும் யாரு ரயில் எஞ்ஜினாய் இருக்கதுன்னு சண்டை. நான்தான் எஞ்ஜினுன்னு, சொன்னேன். நீயோ, நான்தான்னு சொன்னே. உடனே நாம ரெண்டுபேரும் வெங்கடேசன்கிட்டே சொன்னோம். உடனே அவரு, 'நீங்க ரெண்டு பேருமே எஞ்சினா இருக்க முடியாது. எஞ்சின் கறுப்பாய் இருக்காது. அதனால, கறுப்பா இருக்கற நான்தான் எஞ்சினா இருப்பேன்'னு சொன்னாரு. ஞாபகம் இருக்காடா ? வெங்கடேசன் எப்படிடா இருக்காரு?"
  "ஏதோ இருக்கார்."