பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 ★ இல்லம்தோறும் இதயங்கள்


உலற வைத்துவிட்டு அவள் சாப்பிடத் தயாரானபோது, காலை மணி ஒன்பது. சாப்பாடு வந்தது பத்து மணிக்கு.

அப்படியும் அவளால் சாப்பிட முடியவில்லை. நேற்றிரவு சாப்பிடாமலே, ஏன் சாப்பிடல என்று யாரும் கேட்காமலே, தூங்கி எழுந்தவளுக்கு உடம்பின் 'பெளதிகத் தனம் தன் இயல்புப்படி பசியாக மாறியது. சிறுகுடலை பெருங்குடல் தின்பது போன்ற பசி. ஆனால் பசித்தபோது அவளுக்கு உணவு கிடைக்காததால் அந்தப் பசியே ஒரு உணவாகி இப்போது அவளால் புசிக்க முடியவில்லை. ஒரு கவளம் உணவுகூட உள்ளே போக மறுத்தது. சோற்றை எதிரே நின்ற நாய்க்கு வைத்துவிட்டு தட்டைக் கழுவி சமையலறையில் வைத்துவிட்டு வெளியே வந்து அப்பாவைப் பார்த்தாள்.

அந்த ஜீவனற்ற ஜீவன், கல்லாய்ச் சமைந்ததுபோல், குற்றுயிர் கொலையுயிராய் ஆனது போல் அப்படியே கிடந்தது. ஒரு காலத்தில் ஜீவநதியாக ஓடி, இப்போது நீரில்லாப் பள்ளத்தாக்காகப் போன அந்த அப்பாவை அப்படியே பார்த்தாள். அவளுள் ஒரு வைராக்கியம் பிறந்தது. அப்பாவுக்கு எப்படியும் அந்த மாத்திரையை வாங்கிக் கொடுத்து, அவர் உட்காருவதைப் பார்த்தாக வேண்டும். அவரது விழிகள் உருள்வதைக் கண்டாக வேண்டும். ஒருவேளை எதையாவது பேசலாம். அதைக் கேட்டாக வேண்டும்.

எப்படி முடியும்? கையிலே காசில்லை. கடன் கேட்க முடியாத 'அந்தஸ்துள்ளவள்' எப்படி முடியும்? எப்படியோ முடிய வேண்டும். அப்போது கையில் நாலைந்து கடிதங் களோடு வெளியே போய்க்கொண்டிருந்த சந்திரனைப் பார்த்தாள். நேத்து ஆத்திரத்துல பேசிட்டேன்னு தப்பா நினைக்காதே, மன்னிச்சிருக்கா. இப்பவே தூத்துக்குடிக்குப் போய், நீ சொன்னபடியே அந்த மாத்திரைகளை