பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 153


பாட்டொன்றை கல்லூரியில் படித்ததும், அந்தப் பாட்டுக்கு வெங்கடேசன், கோனார் நோட்ஸ் கொண்டு வந்து கொடுத்ததும் அவள் நினைவுக்கு வந்தது. உடனே மரம்போல் கிடந்த தந்தையை நாணங்கலந்த அவலத்துடன் பார்த்தாள். அந்த உருவத்தின் பொட்டல் கண்கள் இரண்டிலும் ஒரு சொட்டு நீர் உருண்டு திரண்டு நின்றது.

மணிமேகலை அவரது கால் பாதங்களைக் கட்டிக் கொண்டே கண்ணீர் சிந்தினாள். கண்ணீர் விடும் அந்த உருவத்தை, இருக்க வைத்து, முடியுமானால் பேச வைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம், வைராக்கியமாக அவள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டதுடன், தனக்குள்ளே தன்னை நொந்துகொண்டாள்.

'சேசே.... பெற்ற அப்பாவை விட காதலியை தம்பி பெரிசா நினைச்சிட்டான்னு நான் கோபப்பட, எனக்கு என்ன அருகதை இருக்கு? நான்கூட, அப்பா மரணப் படுக்கையில் இருக்கிற இந்தச் சமயத்தில் கூட, வெட்கங்கெட்டத்தனமாய் நினைக்கிறேனே, சந்திரன் எம்மாத்திரம்? எப்படியும் அவனுக்கும் ஒரு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டுதான் ஊருக்குப் போகணும்....'

மணிமேகலை வெங்கடேசனை விலக்கிக்கொண்டு, தம்பியைத் தள்ளிகொண்டு தன்னையும் பின்னால் வைத்து, தந்தையை முன்னால் வைத்தாள். மாத்திரைகள் வாங்கியாகணும். யார் போய் வாங்கி வருவார்கள்? ஒரு வேளை ரத்தின அண்ணன்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா?

மணிமேகலை வாரிச் சுருட்டி எழுந்தாள். தலை முடியைச் சரிப்படுத்தாமலே செருப்புகளைப் போட்டுக் கொள்ளாமலே முந்தானையை மட்டும் இழுத்துப் பிடித்துப் போர்த்துக்கொண்டு நடந்தாள். வழியில் இவள்