பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 155


ஆசை தீரப் பார்த்துக்கொண்டே, நெஞ்சில் விழுந்த இடியை நிலத்திலே போட்டவள் போல் நிலம் நோக்கி நடந்தாள்.

ரத்தினத்தின் ஒலை வீட்டிற்குள் அவள் வந்தபோது அவன் தன் மகனுக்கு 'தெல்லாங்குச்சி' சீவிக்கொண்டிருந்தான். அந்தப் பயலோ 'நொங்குவண்டி. நொங்கு வண்டி’ என்றான். வாராததுபோல் வந்த மணிமேகலையைப் பார்த்த ரத்தினத்திற்கு, முதலில் ஒன்றும் ஓடவில்லை. உள்ளே அம்மியில் துவையல் அரைத்துக்கொண்டிருந்த பெண்டாட்டிக்கு கேட்கும் வகையில் "மிராசுதார் மகள் வந்துருக்கு" என்றான். பிறகு "ஏய் கொம்பேறி மூக்கி! இங்க வந்து பாருடி. ஒன் நாத்துனா வந்திருக்காள்” என்று ஆனந்தக் கூத்தாடியபோது, அவனோடு அம்மி மிதித்த அந்தப் பெண், மணிமேகலையை, அருந்ததியைப் பார்ப்பது போல் பார்த்தாள். பிறகு "எழுந்திரும்மா. இந்த கோரப்பாயில உட்காரும்மா ஒம்மத்தானே !! பக்கத்து டெய்லர் கடையில முக்காலி கிடக்கு, எடுத்துக்கிட்டு வாருமே” என்றாள். ரத்தினம் முக்காலியை எடுப்பதற்காக, தன் இருகாலை குவித்தபோது மணிமேகலை கையாட்டித் தடுத்தாள்.

ஆரவாரங்கள் ஒய்ந்தபிறகு, மணிமேகலை தன் அப்பாவின் நிலைமையையும், சகோதரர்களின் போக்கையும் நாகரிகமாக எடுத்துச் சொன்னாள். பிறகு “என் வீட்டு நிலயும் சரியில்ல அண்ணே” என்றபோது ரத்தினம் அமைதி கலந்த ஆவேசத்தில் அவளிடம் பேசினான்.

“ஒனக்கு நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும்மா. அரக்கோணத்துல இவளோட பெரியய்யா பேரன் ஒரு தொழிற்சாலையில டர்னரா வேலை பாக்கான். ஒனக்கு அவனைத் தெரியாட்டாலும் அவனுக்கு ஒன்னைத் தெரியும். நீ அங்க பட்டபாடுல்லாம் அவனுக்குத் தெரியும்.