பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 + இல்லம்தோறும் இதயங்கள்

  "என்னை விசாரிப்பாராடா?” என்று கேட்கப்போன வார்த்தைகளை அவள் அடக்கிக் கொண்டாள். சந்திரன் அக்காவின் கவலையை உணரவில்லை. அவனுக்கும் ஒரு கவலை இருந்ததே காரணம். அதைப் பேச்சில் காட்டினான்.
  "எக்கா! இவங்க வாரதைப் பற்றி நீ லட்டர்ல எழுதலியே?”
  "இவள் கடைசி வரைக்கும் வரமாட்டேன்னு சொன்னாள். 'ஒங்க ஊரு பட்டிக்காடா இருக்கும். மாட்டேன்"ன்னாள். நான்தான், 'ஒனக்கும் ஊர்ல ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாமலா போயிடும்... வாம்மா வா'ன்னு வலுக்கட்டாயமாய் கூட்டி வந்திருக்கேன். எப்போ ஊருக்குப் போகனுமுன்னு என்னையும் இழுக்கப் போறாளோ தெரியல?”
  பாமா சிரித்துக்கொண்டே, சந்திரனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள். மணிமேகலை, ஒரு டாக்ஸியைக் கையைக் காட்டியபோது ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர், தன் வண்டி மாதிரியே அலறிக்கொண்டு சந்திரன் முன்னால் வந்து, முதுகை வளைத்தார்.
  "சாமீ... என்னை இருக்கச் சொல்லிட்டு, டாக்ஸில ஏறினால் நியாயமா? ஒங்க சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கிடைச்ச சவாரியையும் விட்டுட்டு நிக்கிறேன்."
  "நான் என்னப்பா செய்றது ? அக்கா மட்டும் வருவாங்கன்னு உன்னை நிற்கச் சொன்னேன். இப்போ இவங்களும் வந்திருக்காங்க. இந்தா ரெண்டு ரூபாய்."
  "ஒங்களால முப்பது ரூபாய் சவாரி போயிட்டு.”
  "என்னய்யா பஞ்சப்பாட்டு பாடுற? எத்தன நாளு உன் ஆட்டோவுல வந்திருக்கேன்?"