பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 ★ இல்லம்தோறும் இதயங்கள்


"பணம் எவ்வளவு?”

"அட சும்மாக் கிடம்மா. ஒன் பணத்துலதான் நான் அந்த கம்மாவ விலைக்கு வாங்கப்போறேன்? சரி கிளம்பு. ஒன் அண்ணன் இங்க வந்து ரகளை பண்ணப் போறாரு. அப்புறம் மருந்த நல்லா தூள் தூளாக்கி, வெந்நீர்ல கலந்து கொடு. ஒரு நாளைக்கி இரண்டு வேளை."

மணிமேகலை புறப்பட்டாள். மத்தியான வேளை. அப்பா அப்படியே கிடந்தார். அண்ணன் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சந்திரன் இன்னும் அந்தத் தோப்பிலேயே இருந்தான். ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே, மாத்திரைகளை 'கூத்து' கோவிந்தன் கொண்டு வந்து கொடுத்தான். மணிமேகலை உடனடியாக ஒரு மாத்திரையை தூள் துளாக்கி வெந்நீரில் நன்றாகக் கலக்கி தந்தையை லேசாகத் துரக்கிக்கொண்டு, உதடுகளைப் பிரித்து உள்ளே ஏற்றினாள். வெந்நீர்க் கலவை, தொண்டைக்குள் போகும் சத்தம் குட்டி அருவியோசை மாதிரி கேட்டது. இதற்கிடையே வெங்கடேசன் வகையறாக்கள், பூத்தட்டுகளுடன் மேளதாளத்துடன், பத்ரகாளியம்மன் கோவிலுக்குப் போனார்கள். வெங்கடேசன் மேல் சட்டை போடாத மேனியில் ரோஜாப்பூ மாலை விளங்க, கையில் மஞ்சள் காப்பு குலுங்க, கூட்டத்தின் மத்தியில் போய்க் கொண்டிருந்தான்.

நடந்ததையும், நடப்பவைகளையும், அவள் நினைத்து நினைத்து இறுதியில் நெஞ்சத்தை நிர்மூலமாக்கியபோது, பகல் பொழுதும் நிர்மூலமானது. இரவு எட்டு மணிக்கு மீண்டும் ஒரு மாத்திரையை எடுத்து தந்தையின் வாயில் ஊற்றினாள்.

விடிந்தது. அவளுக்கு விடியாததுபோல் விடிந்தது. காலைப்பொழுது. கதிரவன் 'கை விரித்தான்.'