பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 159


மணிமேகலை அப்பாவைப் பார்த்தாள். ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரது கையாடியது. காலாடியது. கண்கள் சுழன்றன. வாய் ஊமைபோல் முனங்கியது. அவள் வீட்டுக்குள் இருந்தவர்களைப் பார்த்து 'இங்கே பாருங்க. பாருங்க' என்று சொல்லிவிட்டு அப்பாவை அணைத்தபடி தூக்கி கட்டிலில் வைத்தாள். அவர் அப்படியே இருந்தார். உடம்பு கீழே சாயவில்லை. "எம்மா.எம்மா.மணி.மணி என்று சன்னமாகச் சத்தங் கேட்டது. ஒட்டில் இருந்து குதித்த கோழியைப் பார்த்து அவரது கண்கள் சுழன்றன. காதுகூட கேட்குதோ?

மணிமேகலை ஆனந்தப்பரவசமானாள். அப்பாவைக் கட்டிப்பிடித்து குழந்தை மாதிரி விம்மினாள். பின் தாய் மாதிரி நீவி விட்டாள். பாட்டி மாதிரி அவரை உச்சி மோந்தாள்.

"அப்பா.அப்பா.அப்பா"

"எம்மா.இம்மா.எம்மா."

மோனத்தின் முழுச்சுகத்தில் அந்த இரு ஜீவன்களும் லயித்தன. மணிமேகலை தந்தையின் கைகளை எடுத்து, தன் முதுகைச் சுற்றி வட்டமாக வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவள் போட்ட சத்தங் கேட்டு அங்கு வந்த அண்ணனும், அண்ணியும் திகைத்து நின்றார்கள். ஒங்களால செய்ய முடியாததை, நான் செய்து காட்டிட்டேன் பாருங்க' என்று பவுசு செய்றாளோ?

அண்ணன் அவளைப் பாராட் டாமல் அவள் மாத்திரைகள் வாங்கிய விதத்தைப் பாராட்டினான்.'

"ஆமாழா, நீ எதுக்காவ ரத்துனத்தோட வீட்டுக்குப் போன ?”

"போனால் என்ன ?”