பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 ★ இல்லம்தோறும் இதயங்கள்


"அவன் என் வயலுல மறியல் பண்ணப் போறேங் றான். நீ என் மானத்த வாங்கும்படியாய் எதுக்காவ போன?”

"நான் எதுக்காவவும் போவல. மாத்திரை வாங்கத் தான் போனேன்!”

"அதுக்கு மட்டுந்தானா, இல்ல..?”

அண்ணிக்காரி, அவன் பேச்சுக்கு இடைச்செருகல் ஆனாள்.

"இன்னும் எதுக்காவ மறச்சி. மறச்சிப் பேசணும்? நேத்து கோவிந்தன் கூட கூத்தடிச்சா. மத்தியானம் ரத்துனங்கிட்ட போயிட்டு வாராள். நாளைக்கி எவன்கூட போகப் போறாளோ? கல்யாணம் ஆவுமுன்னதான் வெங்கடேசன்கிட்ட சிரிச்சா. இன்னுமா இப்டி? நம்ம வீடு தேவடியாக் குடியா மாறப்போவுது பாரும். அங்கேயும் ஏடாகோடமா நடந்திருப்பாள். அதனாலதான் அவங்க துரத்திட்டாவ. ஊர மூட உலமடியா?”

மணிமேகலை காதுகளைப் பொத்திக்கொண்டாள். கண்கள் அப்படியே கொட்ட மறந்து, விழிகள் இமைக்க மறந்து நின்றன. வார்த்தைகளின் வலிமையினால், உள்ளத்தால் உதைபட்டு, முகத்திலே வேர்வை பட்டு, முன்னிருப்பவர் புரியாமல் அவள் தவித்தபோது திடீரென்று 'ஆங் ஆங்' என்று சத்தம்.

மணிமேகலை தவிர, இதர இருவரும் அந்தக் கிழவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அந்த உருவம் இப்போது சன்னமாகவும், அதே சமயம் சாபக் குரலிலும் பேசியது. கண்களில் நெருப்பும் நீரும் ஒன்றாக நின்றன.

"எம்மா! என் மவளே ! உடனே போயிடு. அரக்கோணம் போயிடு, நீ. நிசமாவே என் மகள்னா போயிடு. போ.. என் மவளே. போ.”