பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


தலையிலே செல்லமாகக் குட்டும் பதினைந்து வயதுச் சிறுவன். எல்லாமே இப்போது நடந்தது போலவே இருக்கு!

ரத்தினம் போய்விட்டான். ‘கூத்து’ கோவிந்தன் ஏழெட்டு ஆப்பிள் பழங்களோடும், ஒரு தயிர்ச்சாதப் பொட்டலத்துடனும் வந்தான்.

கனிகளை கையில் வைத்துக்கொண்டே நின்றான். மணிமேகலையை பணிந்து பார்த்துக்கொண்டே நின்றான். இதற்குள் ரயில் வந்துவிட்டது. ‘கூத்து’ கோவிந்தன் ‘லேடீஸ்’ கம்பார்ட்மென்டில் ஏறி, ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டான். மணிமேகலை அங்கு போய் தன்னை முடக்கிக் கொண்டாள். “அரிச்சந்திரன் ஜெயிக்காம போகல. திரெளபதி தேவி முடியை முடியாமல் போகல. கண்ணகி எரிக்காம போகல. கவலப்படாதிங்க தங்கச்சிம்மா”. என்று அப்போதும் மரியாதையுடன் முறை செப்பினான் கோவிந்தன்.

இதற்குள் ரத்தினமும் வந்துவிட்டான். கையில் பழங்கள். அவற்றை அவளிடம் கொடுத்துவிட்டு, பையில் இருந்த டிக்கெட்டை எடுத்து ஜன்னல் கம்பிகள் வழியாகக் கொடுத்தான்.

‘சிக்னல்’ விழுந்தது. ரயில் சத்தம் போட்டது. பிறகு மெல்ல நகர்ந்தது. வேக வேகமாக நகர்ந்தது. அதனுடன் ஒடிய ரத்தினம், ஒரு பொட்டலத்தை உள்ளே எறிந்தான். “பொட்டலம் ஜாக்கிரதை” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே ரயில் ஒடியது. மணிமேகலையின் கண் முன்னால் அவர்கள் மறைந்து மறைந்து மங்கலானார்கள். அப்படியே தன் பிறந்த ஊரின் முகப்புக்குள் அவர்கள் போவது போலவும், அவர்களே அந்த ஊர் என்பது போலவும் அவளுக்குத் தோன்றியது.