பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                              சு. சமுத்திரம்  * 15

  பேச்சு வார்த்தையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மணிமேகலை, தலையில் பளுவோடு இருந்த போர்ட்டரை, அந்த ஆட்டோ ரிக்ஷாவில் வைக்கும்படி சைகை செய்துவிட்டு "நீ செய்தது தப்புடா! பாவம் அவரு! நமக்காகக் காத்திருந்தவர விடுறது தப்புடா... எத்தனையோ நாளு அவரு ஆட்டோவுல போனதால, இன்னைக்கு அவர் பிழப்பு கெடணுமா என்ன ? எத்தனையோ நாளு சாப்பிட்டுவிட்டு இன்னைக்கு சாப்பிடாட்டால் வயிறு கேக்குமா? நீ பஸ்ல வந்துடு. நானும் பாமாவும் இதுல போறோம்" என்றாள்.
  மணிமேகலையும், பாமாவும் ஆட்டோவில் ஏறினார்கள். உடனே டிரைவர் "நீங்களும் ஏறிக்கிடுங்க... காட்டுப் பாதையில கான்ஸ்டபிள் நிக்க மாட்டான்" என்றார். சந்திரன் தயங்கியபோது, மணிமேகலை "சும்மா ஏறிக் கடா..” என்றாள். உடனே அவன், அவசரத்தில் எந்தப் பக்கம் உட்காருவது என்று தெரியாமல், பாமாவின் பக்கமாகப் போனபோது, "அதுக்கு நாளும் நட்சத்திரமும் பொருந்தி வரணும்டா, இப்போதைக்கு நீ என் பக்கத்துலேயே உட்காரு” என்றாள் மணிமேகலை சிரித்துக்கொண்டே.
  "சே! ஒரே இட நெருக்கடி நான் வேணுமுன்னால் இந்த ரயிலுலேயே ஏறி மெட்ராஸ் போயிடட்டுமா ?” என்று சொல்லி பாமா 'விட்' அடித்தபோது, அந்த ‘விட்டை சீரியஸாக எடுத்துக்கொண்டோ அல்லது நிஜமான நெருக்கடி தாளமுடியாமலோ, சந்திரன் இறங்கி, டிரைவர் இருக்கையில் காலியாக இருந்த அணுப் பிளேசுக்குள் ஒடுங்கிக் கொண்டான். 'சே... இந்த மனுஷனுக்கு சென்ஸ் ஆப் ஹல்மர் இல்லையே...' என்று பாமா, தனக்குள்ளேயே முனங்கினாள். அதேசமயம் அவன் திண்டாடிக் கொண்டே உட்காருவதைப் பார்க்க, அவளுக்குக் கொண்டாட்டமாகவும் இருந்தது.