பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். “மாப்பிள்ள! அவள் கையைப் பிடிங்க!” என்று செல்லமான ஆக்ஞை. மணப்பெண்ணின் செல்லமான சிணுங்கல். மணமகனின் முறுவல்.

மணிமேகலை சூட்கேஸை வைத்து தன்னை மறைத்துக் கொண்டாள். இதே ரயில்தான் இவர்களையும் சுமந்து வந்திருக்கிறது. மணப்பெண் அழகாகத்தான் இருக்கிறாள். சென்னைக் கல்லூரியில் படித்த பட்டதாரிப் பெண்ணாம். நீண்டு குவிந்த கைகள்; நிம்மதி பேசும் கண்கள்; எடுத்து முடிந்த கொண்டை, தலைமைக்குரிய தோற்றம்; இரு பக்கமும் மச்சங்கள் கொண்ட சிப்பி வாய்; படிந்த முடி, பணிந்த நோக்கு உறுதி காட்டும் தோரணை; உவகை காட்டும் புன்முறுவல்; கடைந்தெடுத்தது போன்ற கழுத்து. ‘வெங்கடேசத்தான்’ கொடுத்து வச்சவர். ஆனால் நான். நான் கெடுத்துத் தொலைத்தவள்.

மணக்கோஷ்டி தன்னைக் கடந்தபோது மணிமேகலையின் உடம்பு ஆடியது. மெல்ல நகர்ந்து பின்பு விறுவிறுப்பாய் நடந்து பிளாட்பார படியருகே தன்னைக் கொண்டு போய் மறைத்துக் கொண்டாள். அவர்கள் மறைந்து விட்டார்கள்.

மறைந்தவள் சிறிது நகர்ந்தாள். திடீரென்று பையன் ஞாபகம் வந்தது. ஞாபகம் என்று சொல்வதுகூட தவறு. நாடி நரம் பெங்கும் ஊனுடம் பின் அணுவெங்கும் ஊடுறுவி உட்பாய்ந்து நின்ற அந்தத் தாய்ப்பாசம், இப்போது மொத்தமாகத் திரண்டு இதயத்தை அழுந்தப் பிடித்தது. மணிமேகலை எல்லாவற்றையும் மறந்தாள். எதிரே வந்த வண்டிகளைத் தாண்டி, தான் போன திசையில் போன கார்களைவிட வேகமாக ஒடி வெளியே வந்தாள்.

பிள்ளையைப் பார்க்க வேண்டும் ! கண்ணோடு கண்ணை உரச வேண்டும்! ‘என் கண்ணே! என் ராசா !