பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 173


பார்த்தபோது மணி, “எதிர் வீட்ல இருக்கறவங்க பார்த்தால் தப்பா நினைப்பாங்கன்னுதான்.” என்றான். மணிமேகலை தன்னையே தன்னுள்ளே தாக்கிக் கொண்டாள். சூதுவாதில்லாத மனிதர்.

ஒரு மணி நேரம் அப்படியே ஒடியது. அவள் வெறித்த பார்வை திரும்பாது அப்படியே சாய்ந்திருந்தாள். மணியும் அதிர்ந்து போனவன்போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ரத்தினம் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுகூட தவறு. அவளோடு அந்தக் கணத்தில் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

தள்ளி வைத்தவனை நான் ஏன் தள்ளி வைக்கக் கூடாது? பிடிக்காதவனிடம் ஏன் பிச்சைக்காரிபோல் இருக்க வேண்டும்? தாலியை அறுத்துப் போட்டு விடலாமா? எனக்கு வழி சொல்லிட்டு, அப்புறமாய் ஒன் ரெண்டாந்தர பெண்டாட்டியுடன் கொஞ்சுடான்னு கேட்கலாமா? அந்த வசந்தியை விரட்டியடிக்கலாமா? வேண்டாம்! இது, என் மகனுடைய எதிர்காலம் சம்பந்தப் பட்ட விவகாரம். அவன் நல்லா இருக்கணும். நல்லா படிக்கணும். நான் கெட்டாலும் அவன் கெடக்கூடாது. அவன் அப்பா மாதிரியே எஞ்ஜினியராய் வரணும். "சீச்சி. எஞ்ஜினியராய் வேணு முன்னா வந்துட்டுப்போவட்டும். ஆனால் அந்த வஞ்சகணை மாதிரி வரவேண்டாம். அந்த அடுத்துக் கெடுத்த பாவி மாதிரி ஆகாண்டாம். என்ன செய்யலாம்? என்னால கட்டிக் கொள்ளவும் முடியல. வெட்டிக் கொள்ளவும் முடியலியே. இங்கேயே இருந்துடலாமா? வேலைக்காரியாவே இருந்துட லாமா? வேண்டாம். நான் படும் பாட்டை என் மகன் கண்டு, அவன் பிஞ்சு மனம் பழுத்துவிடக் கூடாது. காய்க்காமலே பழுக்கக் கூடாது.

“அப்படின்னா, என்ன செய்யலாம்? இங்க இருக்க முடியாது. இருக்கக் கூடாது. எங்கேயாவது ஒடிடணும்.