பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 177


கிடைக்காததால், கர்ப்பிணிப் பெண்கள்போல் வயிறு புடைக்க நின்ற குழந்தைகள். சக்கரவண்டியில் பஜ்ஜி சுடும் பையன்கள். கரும்புச்சாறு பிழியும் இளைஞர்கள். சந்தேகத்துடன் தன்னைப் பார்க்கும் சிவப்புத் தொப்பிகள் சந்தேகமில்லாமல் தன்னையே வாடிக்கைக்காரி மாதிரி நினைத்து, முகந்துருத்தி முறைக்கும் முரடர்கள்-இத்தனை பேரையும் அவள் வேடிக்கையாகப் பார்த்தாள்; வாழ்க்கை வேடிக்கையாகி விட்டால், வாழ்வதும் வேடிக்கைபோல் தெரியுமோ? கஷ்டங்கள் அடுக்கடுக்காய் வந்தால், அந்தக் கஷ்டமே ஒரு ரசனையாகி விடுமோ?

ரசனையுடன் பார்த்த அவளுக்குக் கொஞ்சம் பயம் பிடித்தது. அந்த முரடர்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளில் வேறு, பலவிதமான செய்திகள் வருகின்றன. இவள் பயந்துபோய் எழுந்தபோது மணி வந்துவிட்டான். இந்த மணியால் இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி இவ்வளவு சீக்கிரமாய் முடிக்க முடிந்தது? சரியான மணி! மணியான மணி!

மணி பேசாமல் சிரித்துக்கொண்டே நின்றான். அவள் அவசரத்துடன் கேட்டாள்:

“பழந்தானே?”

“இன்னைக்கு காய். நாளைக்குப் பழம்!”

“என்ன சொல்றிங்க?”

“மணிமேகலை விடுதி வார்டன் பம்பாய் போயிருக்கார். நாளைக்குக் காலையில வந்துடுறாராம். வந்ததும் சேர்ந்துடலாம்!”

“அப்படியானால் இன்னையப் பொழுதை எப்படிக் கழிக்கது?”

“என்ன பண்றது? ஏதாவது ஒரு லாட்ஜில தங்க வேண்டியதுதான்.”