பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 183


இறக்கி ஒலைப்பாயில் உட்கார்ந்திருக்கும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு கொடுக்கப் போகும் பூக்காரி. ஒரு சின்னத் தட்டுப் பலகையை வீடாகக் கொண்ட ஒரு நடுத்தர வயது மாது. பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் எப்போது போவார்கள் தாங்கள் ஒவ்வொரு துணுக் கருகிலும் பிளாட்பாரத்திலும் படுத்துத் துரங்கலாம் என்று நினைத்து நிற்கும் தெருவோரப் பெண்கள். அப்புறப் படுத்துவதற்குக்கூட அருகதை இல்லாதவர்களாய்ப் போன இவர்கள் முன்னால் நான் சாதாரணம். வெறுஞ் சாதாரணம் இந்த மனித ஜீவன்கள் அருகே முடங்கலாமா? எப்படி முடியும்? பழக்க தோஷமுன்னு ஒண்ணு இருக்கே!

மணிமேகலை உயர்நீதிமன்ற காம்பவுண்ட் சுவரை விழித்துப் பார்த்தாள். அது நீதி வழங்குவதுபோல ஒரு போஸ்டரைக் காட்டியது. பேரின்பப் பெருவிழா... கடற் கரையில்... சீரணி அரங்கத்தில் இன்று இரவு முழுக்கப் பிரார்த்தனையாம். பிரார்த்தனை செய்கிறோமோ இல்லையோ, பிரார்த்திப்பவர்களை மானசீகக் காவலர்களாக நினைத்து இன்றைய இரவை ஒட்டிவிடலாம்.

அந்த இரவில் ஒட்டத்திற்கும் நடைக்கும் உருவமாகி, சீரணி அரங்கிற்கருகே அவள் வந்தபோது, அரசியல் வாதிகள் நான்கு பேரையும் வைத்துக்கொண்டு சொல்வார்களே ‘அலைகள் அங்கே தலைகள் இங்கே’ என்று, அது போல் நிஜமாகவே மனிதத் தலைகள். தாழ்ந்த தலைகள். தலை கவிழ்ந்த தலைகள். மேடையில் வண்ண விளக்குகள் ஜொலித்தன. சிலுவைக்குறி வண்ண வண்ண விளக்குகளால் எண்ணத்தை தூய்மையாக்கும் எழுச்சிக் குறியாகச் சுடர் விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக, மணிமேகலை உட்கார்ந்தாள். கிறிஸ்தவர்களின் பேரின்ப விழா நடந்து கொண்டிருந்தது.

மேடையில் ஒருவர் தாள நயங்களுடன் பாடிக் கொண்டிருந்தார்.