பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 185


இந்தப் பாடல் அவளை ஆட்கொண்டது. முரண்பட்டது போல் தோன்றிய இந்த இரண்டும், உண்மையில் ஒருமைப் பட்டதுபோல் அவளுக்குத் தோன்றியது. முன்னது, இப்படி வாழ்கிறார்களே என்ற தார்மீகக் கோபம், பின்னையது கோபத்தை நீக்கிய ஒரு தார்மீக வேதனை.

அப்படியும் இப்படியமாக அந்தப் பெருங்கூட்டத்தில் பிரார்த்தனையிலும், பாட்டிலுமாக நேரத்தைக் கழித்தாள். அந்தக் கூட்டத்தையும் அதற்கு மேடையில் நின்று ‘சுவிசேஷ செய்தி’ வழங்கியவர்களையும் பார்த்தபோது அவளுக்கு ஒன்று புரிந்தது. உலகில் பாவிகள் இருக்கும் அளவிற்குத் தியாகிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இரு துருவத்திற்கும் இடைப்பட்டவர்கள்தான் மதில்மேல் பூனையாகிறார்கள்.

காலங் கழிந்து, காலையானது.

எல்லோரும் கலைந்தார்கள். சுற்றமும் நட்பும் சூழ வந்தவர்கள் இப்போது அவர்கள் புடைசூழப் போய்க் கொண்டிருந்தார்கள். பூச்சியைக் கெளவும் பல்லிபோல மணிமேகலையை பயம் கெளவிக்கொண்டது. எங்கே போவது ? விடுதிகளை விசாரித்துப் போகலாமா ? வீட்டுக்கே திரும்பலாமா?

மனம் அலைந்ததுபோல் கால்களும் அலைந்தன. இவ்வளவு பெரிய சபையிலே எனக்கொருவர் இல்லையா? இவ்வளவு பெரிய தலைநகரில் எனக்குப் புகலிடம் இல்லையே! சமுத்திரத்தில் விழுந்து சாகலாமா? ரயில் தண்டவாளத்தில் தலையைக் கொடுக்கலாமா?

உள்ளம் விறைக்க, உடம்பெல்லாம் வேர்க்க அவள் நடந்தாள். எதாவது ஒரு வழி கிடைக்கும் என்று நம்பியவள் போல வானொலி நிலையத்தைக் கடந்து ஆழ்வார் பேட்டையை விட்டு அகன்று, வன்னிய தேனாம்