பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                             சு. சமுத்திரம் + 17

எஸ்டேட் பங்களாபோல் காட்சியளித்த அந்த வீட்டின் முன்னால், டிராக்டரின் மேல் மோதாமல், லாவகமாக நின்றது ஆட்டோ ரிக்ஷா.

  பெரிய சாய்வு நாற்காலியில், நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துக்கிடந்த மிராசுதார் அருணாசலம், மகளைப் பார்த்ததும் எழுந்தார். மணிமேகலை, ஒரே தாவாகத் தாவி வந்து, அப்பாவின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டாள். மகளைப் பார்த்ததும் அந்த அறுபது வயது கம்பீரக் கிழவரின் மனதில் என்னவெல்லாமோ தோன்றியிருக்க வேண்டும். திருமணம் ஆவதற்கு முன்பு, அடிக்கடி வீங்கிப்போகும் தன் கால்களுக்கு வென்னீர் ஒத்தடம் கொடுத்து, வேளா வேளைக்கு மாத்திரைகளை விழுங்க வைத்து, திருட்டுத்தனமாக தோப்பில் தொங்கும் மாம்பழம் ஒன்றைப் பறித்துத் தின்னும்போது எங்கிருந்தோ வந்தவள்போல் தட்டிப் பறித்து, அவரைக் கருணை பொங்கப் பார்த்துவிட்டு, கைகளைப் பிடித்து, வீட்டுக்குள் இழுத்துக் கொண்டுபோய், பார்லி கஞ்சியைக் கொடுத்துவிட்டு, அவர் தூங்கும்வரை, தான் துங்காமலே கால்களைப் பிடித்துவிட்டு, தலையைக் கோதிவிட்டு, முதுகை அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் அந்த மகளின்-அந்தத் தாயின் தரிசனம் கிடைத்துவிட்ட நெகிழ்ச்சியில் இரண்டு சொட்டு உஷ்ண நீரை, கண்கள் விடுவிப்பதைப் பார்த்த மணிமேகலை திடுக்கிட்டாள். அவர், இப்படி கண்ணீர் விட்டதை எப்போதுமே பார்த்தறியாதவள். அறியாப் பருவத்திலேயே அவள் அம்மா இறந்தபோது கூட, மனைவி மீது உயிரையே வைத்திருந்த தன் தந்தை, துக்கத்தை வாயில் துண்டை வைத்து அடைத்தாரே தவிர, அழவில்லை என்பதை அறிந்திருந்த மணிமேகலைக்கு, என்னவோ போலிருந்தது. அப்பாவுக்கு எற்ற மகளான அவள், பொங்கி வந்த விம்மலை, தன் இயல்பான