பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 161


நினைச்சது தப்புடா. என் மணிமேகலை இருக்காடா" என்று கரங்குவித்துச் சொன்னபோது மணிமேகலை மெய்யுருகி நின்றாள். அவர்கள் வெளியே வந்தபோது ஒரு காரில் இருந்து ஆண்களும் பெண்களுமாக அட்டகாசமாக இறங்கினார்கள். மணிமேகலை கல்லாய் நின்றாள்.

மிஸ்டர் ஜெயராஜ், மிஸ்ஸஸ் ஜெயராஜ், பாமா, அவள் புருஷன் எல்லாவற்றிற்கும் மேலாக ராமபத்திரன்.

காருக்குள்ளேயே ராமபத்திரன் கையை விட்டு இழுத்தார். அழுகைச் சத்தங் கேட்டது. பிறகு ஜெயராஜ் வந்து காருக்குள் கையை விட்டு அழுததை வெளியே கொண்டு வந்து தோளில் போட்டான். மணிமேகலையின் ஏழு வயது மகன். இளைத்திருக்கிறான். முகம் வீங்கியது போல் தோன்றியது. செத்த ஆட்டின் கண்களைப் போல் கண்கள் மங்கலாய் வெளுத்துத் தெரிந்தது.

மணிமேகலை தன் வயிற்றைப் பிடித்தாள். 'என் செல்வமே. என்று வந்த வார்த்தைகளை விரட்டிப் பிடித்தாள். ஒடப்போன கால்களுக்கு நிலத்தில் அவற்றைத் தேய்த்து உதை கொடுத்தாள்.

‘என் ராஜா. என் முத்தே. அம்மா இங்கேதான் இருக்கேண்டா. இங்கேதான் இருக்கேண்டா. அப்பா அடிக்காராடா ? வசந்தி திட்டுறாளாடா ? நல்லாச் சாப்பிடுறியாடா? நல்லாத் தூங்குறியாடா ?’

பையன் வசந்தியைப் பார்த்து ‘சித்திகிட்ட போயிட்டேன்’ என்று அப்பாவிடம் சொல்வது மணிமேகலைக்கு நன்றாகக் கேட்டது.

'என் ராஜா சித்தின்னு சொல்லாதடா. அம்மான்னு அவளைப் பார்த்து ஒரு தடவயாவது சொல்லுடா.

அப்படியாவது நீ அம்மான்னு கூப்புடுற வார்த்தையை கேக்குறேண்டா. எப்படியாவது யாரைப் பார்த்தாவது