பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★205




வேண்டிய இந்த மனிதாபிமானக் கட்டிடத்திற்கு இன்னும் வேலையிருப்பது மனிதாபிமானத்திற்கே ஒரு சாட்சியாகவும், அதேசமயம் ஒரு சாவு மணியாகவும் தோன்றியது. இன்றும் இவர்கள் துரத்தப்படுகிறார்கள். இன்றும் இங்கே மனிதாபிமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இருநூறு பேர் இருக்கிறார்கள். உருக் குலைந்தாலும் உள்ளம் குறையாதவர்கள். சிலருக்கு உடம்புக்கும் பலருக்கு உள்ளத்திற்கும், மருந்தும் கருணையும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இங்கே ஒரு தொழிற்கூடம் இருக்கிறது. நாற்காலி, மேஜைகள் செய்யப்படுகின்றன. பெண்கள் பாய் நெய்கிறார்கள். பெட்டிகள் பின்னுகிறார்கள். இவர்களுக்காக, அரசாங்கமும் மான்யம் கொடுக்கிறது. நல்லவர்களும், கெட்டவர்களும் நன்கொடை கொடுக்கிறார்கள். இவை கடலில் கரைத்த காயக் கட்டிகள். வெறும் உப்பு. இந்த உப்புப் போடுவதற்கான உணவுப் பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் இந்த அம்மையாரின் தாய்நாட்டில் உள்ள ஒரு தர்ம ஸ்தாபனத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னால், வெங்கடேசனால் இங்கு சேர்க்கப்பட்ட மணிமேகலை முதலில் பெட்டி முனைந்து பழகினாள். பிறகு தனது இயல்பான தாய்மை யாலும் இக்கட்டான சமயத்தில் சொன்ன உபாயங்களாலும் அந்த மூதாட்டியால் அடையாளம் காணப்பட்டு அவரது வாரிசுபோல் ஆகிவிட்டாள். இதனால் இவள் பெட்டி பின்னுவதை விடவில்லை. விற்பனைப் பொருட்களை தயாரிப்பதிலும், உணவுப் பொருட்களை வாங்கு வதிலும் கண்ணாகவும், காதாகவும் கையாகவும் இருந்து வருகிறாள்.

"முந்நூறு ரூபாய் துண்டு விழுதேம்மா” என்று அந்த மூதாட்டி சொன்னபோது, எதையோ சொல்லப்போன மணிமேகலை, குதிரை லாடம் போன்ற ஒலியைக் கேட்டு நிமிர்ந்து பிறகு "வாங்க" என்றாள் வாயார.