பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                            சு. சமுத்திரம் +  19


போட்ட மூணு வடம் சங்கிலியைக் காணல?" என்றாள் அந்தத் திறனாய்வுக்காரி.

  இதற்குள், மணிமேகலை வந்துவிட்ட செய்தி கேட்டு, உறவுக்காரர்களும், ஊர்க்காரர்களும் அங்கே குழுமினார்கள். பஞ்சாயத்துத் தலைவரான பெருமாளும், அவரை முறியடிக்க நினைக்கும் கர்ணமும், இந்த இரண்டு பேருக்கு இடையே சண்டையை மூட்டிவிடும் முன்ஸீப்பும் வந்து விட்டார்கள். இன்னும் யார் பக்கமும் சேராமல் இருக்கும், மிராசுதார் அருணாசலத்தை ஆழம் பார்ப்பதற்காக அங்கே வந்த இந்த பிரமுகர்கள், "என்ன மணிமேகல... ஒங்க ஊரு எப்படி இருக்கு" என்று சொல்லிவிட்டு, அவள் பதிலை எதிர்பாராமலே, "அருணாசலம் மச்சான், நம்ம பெருமாள பஞ்சாயத்துக்கு நிக்காதடா... யூனியன் தலைவருக்கு நில்லுடாங்கறேன்; கேக்கமாட்டக்கான். நீராவது புத்தி சொல்லும்" என்று மிராசுதாருக்கு புத்தி சொல்வது போல, கர்ணம், பெருமாளுக்கு 'தேர்தல் குழியை' வெட்டிக் கொண்டிருந்தார். "விரலுக்குத் தக்கபடி வீக்கம்வே... நீரு நின்னா அதுல அர்த்தம் இருக்கு" என்று ப. தலைவர், பதிலுக்கு, தனக்கு வெட்டப்படும் குழியில், கர்ணத்தை தள்ளப் பார்த்தார். முன்ஸீப்போ, "ஆயிரம் சொல்லுங்க... இந்தத் தடவ அருணாசலம் மச்சான்தான் நிக்கணும்" என்று இரு தரப்புச் சண்டையை முத்தரப்பாக்கப் பார்த்தார்.
  மிராசுதார் அருணாசலமும் நின்றார். தான் உட்கார்ந்தால் அவர்களும் எங்கே உட்கார்ந்துவிடுவார்களோ என்று பயந்து நின்றார். வாய்வலிக்குப் பயப்படாத அவர்கள், கால்வலிக்குப் பயந்தாவது போவார்கள் என்று நின்ற படியே, அந்தப் பகலில் அவர் கனவு கண்டுகொண்டிருந்தார். ஆசையோட மகளைப் பார்த்துக்கிட்டே இருக்கணுமுன்னு நினைச்சா, இந்த முடிச்சிமாறிப் பயலுவ எலெக்ஷனப் பத்தி பேசுறாங்க பாரு!