பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் + 215



விட்டுவிடக் கூடாது? அவர்களாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஒன்றையும் நினைக்காமல் இருந்தது சரிதான். ஆனால் இங்கே இந்த அனாதைகள், வயிற்றுக்குக் கிடைக்காமல் கையது கொண்டு மெய்யது பொத்தி, அவள் எப்படியும் தங்களைக் கைவிட மாட்டாள் என்று நம்பும்போது நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா?

ஒன்று இந்த இல்லத்தை சிலர் சொல்வதுபோல் இழுத்து மூட வேண்டும். அல்லது தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சொத்தைப் பெற்று இதன் கதவுகளை-இந்த பேரின்பப் பெரு உறவுக் கதவுகளை அதியமானின் அரண்மனையைப் பற்றி ஒளவையார் சொன்னதுபோல, அடையா நெடுங்கதவாய் ஆக்க வேண்டும். ஜன சமுத்திரத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஒருத்தி உறவுக் கிணற்றை மூடுவதில் தவறில்லை. விலக்கியவர்களிடமிருந்து சொத்தை விடுவித்து இந்த இல்லத்தின் ஒளியைப் பராமரித்தாக வேண்டும். இங்கே ரத்த பாசத்திற்கு இடமில்லை. ரத்தம் நீரைவிட அழுத்த மானதாக இருக்கலாம். ஆனால் அந்த ரத்தம் சேவை யென்று வரும்போது, சீழாகவும் மாறலாம். பொதுநலத்தில் இவர்களின் விருப்பங்கள்தான் முக்கியம். இவர்களின் நம்பிக்கைதான் முக்கியம். இவளா செய்தாள் என்று உறவு நம்பிக்கையிழந்து போனதுபோல் ஒலமிட்டால் ஒல மிடட்டும். அவள் அனுபவிக்காத ஒலமா?

மணிமேகலை திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்தாள். அப்போது 'அம்மா அரிசிக்கு என்று ஒரு இன்மேட் கேட்டபோது அவள் ஒரு மஞ்சள் கயிற்றைப் போட்டுக்கொண்டு, தாலிச்சரட்டைக் கொடுத்து மதுராந்தக சேட்டிடம் விற்று அங்கேயே நாலு அரிசி மூட்டைகளை வாங்கி வரச் சொன்னாள். மாத்திரைகள், இன்னும் ஒருவாரம் தாளும். மருத்துவருக்கு மூன்று மாத பாக்கியில் பாதியாவது கொடுத்துவிடலாம்.