பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 225



"அறுபது பவுன் நகை வரணும். அப்பா கொடுத்த ரொக்கம் வரணும். சொத்து செட்டில் ஆகணும். என் பிள்ளையும் எனக்கு வேணும்."

மாமியார்க்காரிக்கு தன் முன்னாள் மருமகள்மீது கருணை வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. அறுபது பவுனை விட முடியுமா?

"எப்படியோ ஒன்னப் பிடிச்ச சனியும், எங்களப் பிடிச்ச சனியும் ஏழரை நாட்டானாய் ஆயிட்டு. ஒன்னை நாங்களும் அப்படி பண்ணியிருக்கப்படாதுதான். சரி போவட்டும். பேசாமல் இனிமேல் நீ இந்த வீட்டுக்கு வந்துடு, தாயாய் பிள்ளயாய் இருக்கலாம்."

மணிமேகலை மாறவில்லை.

"சரி நாம போவோமா? இவங்ககிட்ட பேசி பிரயோஜனமில்ல. பேசவேண்டிய இடத்துல பேசிக்கலாம். நாளைக்கே என்னோட நோயாளிச் சகோதரிகளை கூட்டி வாரேன். ரத்துனம் அண்ணே ! மெகாபோன் இந்த ஊர்லயே கிடைக்கும். என்னை தாயாய் நினைச்ச தொழிலாளிங்க எனக்கு உதவாமயும் போகமாட்டாங்க. சரி. எழுந்திருங்க! நான் இனிமேல் போய்தான் அங்க, அவங்களுக்கு சாப்பாட்டைக் கவனிக்கணும். மதுராந்தகத்துல வாங்குன அரிசி தீர்ந்து போயிருக்கும்."

ஜெயராஜூம், சங்கரனும், வசந்தியும், கிழவியும் திணறினார்கள். திடீரென்று சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடந்த கிழவர் எழுந்தார். ஜெயராஜிடம், "சாவியைத் தாடா வேட்டியை மாத்தணும்" என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு உள்ளே போனார்.

கால்மணி நேரத்தில் நகைப்பெட்டியைக் கொண்டு வந்தார்.