பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 227


மணிமேகலை சிறிது யோசித்தாள். அவனைப் பார்த்த பிறகு அவனும் தன்னோடு வருவேன் என்றால். இப்போது தான் அம்மாவை மறந்திருப்பான். இப்போதுதான் ஏக்கக் காயங்கள் ஆறிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அவனைப் பார்த்து தன்னை நினைவூட்டி, அவனுக்கு கலக்கத்தைக் கொடுக்கலாமா? கூடாது! என் கண்மணி இங்கேயே இருக்கட்டும். என் ராஜா, அம்மாவைப் பார்க்க வேண்டாம்! அவன் அப்பா பிள்ளையாகவே இருக்கட்டும்.

மணிமேகலை, மாமியாருக்குப் பதில் சொல்லாமலே காரில் ஏறினாள். அவளுடன் வந்தவர்களும் வண்டியில் அமர்ந்தார்கள். எவரும், எதுவும் பேசவில்லை. அந்த மெளனத்தின் கோர தாண்டவத்தை கலைத்துக்கொண்டே கார் புறப்பட்டது.

9

ல்ல காரியங்களைத் துவக்குவதற்கு, நாளையோ நட்சத்திரத்தையோ அல்லது ஆளுதவி, பொருளுதவியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. காந்தம் இரும்பை இழுப்பதுபோல், இந்த காரியங்களே தாங்கள் நிலைப்பதற்கான வழிவகைகளை கண்டுபிடிக்கும். பேசாமல் பேசி, பேசாமடந்தைகளையும் பேச வைக்கும். ஈயாத லோபிகளையும் வள்ளல்களாக்கும். நலமனைத்தும் வருவதற்கு காலமாகலாம். ஆனால் அவை காலாவதியாகாது. ஏனென்றால் நற்பணிகள் இறைவனின் திருமிகு அவதாரங்கள். அவற்றை வணங்காத முடி இல்லை. வாழ்த்தாத வாயில்லை. ஈயாத கரமில்லை. பூமியின் ஈர்ப்பு சக்தியைக் கடந்துவிட்டால் எந்த ஒரு பொருளும், எப்படி மேலோங்கி மேலோங்கிப் போக முடியுமோ, அப்படி நற்பணிகளை நம் சுயவிருப்பு—வெறுப்பின் ஈர்ப்புக்கு