பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 229


ஊரில்கூட அண்ணனும், தம்பியும் பெருமையோடு பேசிக் கொள்கிறார்களாம். “எங்க மணிமேகல சின்ன வயசிலேயே இப்படித்தான். பிறத்தியார் கஷ்டப்படுறத பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டாள்” என்று அண்ணிக்காரிகட சொல்கிறாளாம். சொல்லட்டும்! அவர்கள் சொன்னதால் அவள் குளிர்ந்துவிடவும் இல்லை. உயிலைக் காட்டிய பிறகும், ஒரு மாதம்வரை முரண்டு பிடித்த அண்ணன் தம்பிகள்மீது, அவர்களின் அன்றைய போக்கை நினைத்து கொதிக்கவும் இல்லை. உறவின் உள்ளர்த்தத்தைப் புரிந்தவளாய் மனித நேயத்தின் பெருஞ்சக்தியை அறிந்தவளாய் சேவைக்கு ஈடு தெய்வம் ஒன்றே என்ற பேரானந்த அனுபவத்தில் தேர்ந்தவளாய்த் திகழ்கிறாள்.

காலம் மாறியதோ என்னவோ அந்த காலத்தின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் போனவர்கள் கூட இப்போது எழுந்து நிற்கிறார்கள். அந்த முன்னாளைய நோயாளிகள் இங்கே சஞ்சலமற்று கழிவிரக்கம் இல்லாமல் வாழ்கிறார்கள்.

மணிமேகலையை வெங்கடேசன் அடிக்கடி வந்து பார்க்கிறான். அவளின் பிரச்னைகளை தீர்த்து வைத்தவன். இப்போது தன் பிரச்னைகளின் தீர்வுக்கு அவளை நாடுகிறான். எல்லோரையும்போல அவனும் அந்த இளம் பெண்ணை ‘அம்மா’ என்கிறான். அவளுக்கு பணம் கொடுத்து விடுதலைப் பத்திரம் வாங்க வந்த ஜெயராஜ்கூட அவளைக் கையெடுத்து கும்பிட்டுவிட்டுப் போனான். அவள் மாமனார் இங்கே வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டுப் போனார். ஊரில் ரத்தினம் அவளுக்கு ‘வரவேற்பு விழா’ வைக்கப் போனான். அவள்தான் ‘அந்தப் பணத்தை இங்கே அனுப்பு இப்போதே அனுப்புக’ என்று சொல்லிவிட்டாள். நம் கூத்து கோவிந்தன் இந்த இல்லத்தில் இருந்த முன்னைய நோயாளியும் இன்றைய