பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அழகியுமான ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுராந்தகத்தில் குடியிருக்கிறான். ‘அல்லி அரசாணியையும்’ ‘பவளக்கொடியையும்’ ‘மதுரை வீரனையும்’ கூத்தாகப் போட்டுக் கொண்டிருந்தவன், இப்போது மணிமேகலையின் அறிவுரைப்படி நோயாளி என்றால் இளக்காரமா? ‘கிழவனும் ஒரு காலத்தில் வாழ்ந்தவனே’ ‘மனைவி என்ன மண்ணாங்கட்டியா?’ ‘உனக்கும் நோய் வரலாம்’ ‘ஈயாதவன் இருந்தென்ன போயென்ன’ என்ற தலைப்புக்களில் பல கூத்துகளை போடோ போடென்று போடுகிறான். காசுக்குக் காசு! சீர்திருத்தத்திற்கும் சீர்திருத்தம்! என்றாலும் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை அந்த அருளில்லத்திற்கு கொடுத்து விடுகிறான். சமீபத்தில், ‘இப்போது கண்ணகி முக்கியமல்ல. கற்பழிக்கப்பட்ட பெண்களே’ என்ற தலைப்பில் அவன் கதை வசனம் எழுதி டைரக்ஷன் செய்து வில்லனாகவும் நடித்த நாடகம் ஒன்று சக்கை போடு போடுகிறது. அரசாங்கத்தின் விளம்பர இலாகா அந்த நாடகத்தை வாங்கி அவனுக்கு ‘ராயல்டி கொடுக்கப் போவதாகக்கூட கேள்வி. அதை அவசரப்படுத்துவதற்காக மணிமேகலையிடம் ஒரு போன் போட்டு சொல்லு தங்கச்சி’ என்றான். அவளோ “நல்லதுக்கு சிபாரிசு செய்தால் சிபாரிசு செய்யப்படுகிறது எல்லாம் நல்லதுன்னு ஆயிடும். அதனால வாரது அது பாட்டுக்கு வரட்டும்” என்று சொல்லிவிட்டாள்.

என்றாலும், மணிமேகலை ஒரு பற்றற்ற யோகியாகி விட்டாள் என்றும் சொல்ல முடியாது. ஆயிரம்பேர் அவளை அம்மா என்று சொன்னாலும் தன் ஒன்பது வயது மகனிடம் இருந்து கடந்த இரண்டு வருடமாக இந்த வார்த்தையை கேட்கவில்லையே என்ற ஆதங்கம் அப்பப்போ வருகிறது. கேட்பது கிடக்கட்டும். அவனைப் பார்க்கக்கூட இல்லையே?

இன்றும் அப்படித்தான்—