பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 231


கணக்குப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலைக்கு திடீரென்று தன் மகனின் ஞாபகம் வந்துவிட்டது. எவரும் நினைவு படுத்தாமலேயே வந்து விட்டது. தாய்மையின் தாபம் அவளைக் கொல்லாமல் கொன்றது. கணக்குப் புத்தகத்தை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை. அதை மூடிவிட்டு ‘அம்மாவின்’ படத்தைப் பார்க்கிறாள். பிறகு தற்செயலாக இந்திய அரசாங்கத்தின் தகவல்—ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட மாதக் காலண்டரைப் பார்க்கிறாள். சர்வதேச குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு பல குழந்தைகளின் படங்களை, பலவித கோணங்களில் காட்டும் புதுமையான காலண்டர். மணிமேகலை அந்த மாத இதழின் ‘குழந்தையைப்’ பார்க்கிறாள். எல்லோரும் பந்து விளையாடும்போது தான் மட்டும்—விளையாடுவது கிடக்கட்டும், நிற்கக்கூட முடியலியே என்று ஏங்கும் ஒரு முடச் சிறுமியின் படம் அது. மணிமேகலை குழந்தை மாதிரி ஒவ்வொரு தாளாகப் புரட்டுகிறாள். கஞ்சியில்லாக் குழந்தை. வாடிய குழந்தை இடையிடையே வண்ணச் சிரிப்புதிர்க்கும் குழந்தை. இறுதியில் யாருமே இல்லை என்று கைவிரித்துக் காட்டும் பரிதாபக் குழந்தை!

மணிமேகலைக்கு கண்ணீர் வருகிறது. திடீரென்று ஒரு எண்ணம் வருகிறது.

என் பிள்ளை நன்றாய்த்தான் வளர்கிறான். ஆனால் இங்கே—இந்த காலண்டரில்—காலண்டர் கிடக்கட்டும், இந்த இல்லத்தில் இருக்கின்ற பல இளம்பெண்கள், வீட்டில் விட்டுவிட்டு வந்த தங்கள் குழந்தைகளை நினைத்து தன்னிடம் எத்தனை தடவை அழுதிருக்கிறார்கள். ‘என் பிள்ளையைப் பார்க்க முடியலியே’ என்று புலம்பவில்லை. என் பிள்ளையை அங்கே கவனிக்க ஆளில்லையே’ என்ற இயலாமைப் புலம்பல்கள். எதுவும் செய்ய முடியாத நிர்க்கதியான நெஞ்ச வெடிப்புக்கள்!