பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 ★ இல்லம்தோறும் இதயங்கள்



திடீரென்று அவள் மனதில் இன்னொரு செயல் திட்டம் வருகிறது.

பூந்தமல்லிக்கு அருகே மதுரவாயல் என்ற சாலையோர கிராமத்தில் திருமதி லில்லி பிரபாகர் என்ற நிஜமான சமூக சேவகி குழந்தைகள், காப்பகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம். நாடெங்கிலுமுள்ள பெரு வியாதிக்காரர்களின் பிள்ளைகளைக் கொண்டுவந்து நாள்தோறும் மும் முறை உணவளித்து, கல்வியளித்து, நற்பணி செய்வதாகக் கேள்வி. நாமும் ஏன் இந்த தாய்மார்களின் வசதியற்ற பிள்ளைகளைக் கொண்டு வந்து இதர அனாதைக் குழந்தைகளையும் கூட்டி வந்து ஒரு காப்பகம் கட்டக் கூடாது?

மணிமேகலை அந்த காம்பவுண்டுக்குள் வெற்றிடம் ஒன்றை நோக்குகிறாள். அவள் மனவெளிக்குள் ஒரு கட்டிடம் எழும்புகிறது. குழந்தைகள் குவிகிறார்கள். கட்டிடம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. மனவெளியில் இவை பரந்து விரிய விரிய அவளது சொந்த தாபம் குறைந்து குறைந்து ஒரு அனுவாக மாறுகிறது.

துரய வெண்துகில் ஆடையில் செவ்வரளிப் பூப்போல, சிவந்திப் பூ நிறம்போல, எளிமை அழகாக, அந்த அழகே கருணையாக பேனா பிடித்த சரஸ்வதி போல, அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சிந்தனை, சீக்கிரமாய் காப்பகமாய் உருவாகும் என்பதுபோல் டெலிபோன் மணி அடிக்கிறது.

மணிமேகலை எழுகிறாள்.