பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                                 சு. சமுத்திரம் + 27


முண்டாப்பனியனும், முரட்டு மீசையும் வைத்திருந்த அவன் "மணிமேகலை... சுகமா இருக்கியா? பொழுது சாய்ந்த நேரத்துலயா கம்மாவுக்கு போறது?" என்றான். ஏழ்மையை கம்பீரமாக ஏற்றுக்கொண்டிருப்பதுபோல் தோன்றிய அவனைப் பார்த்து பாமாவுக்கு லேசாக எரிச்சல்கூட ஏற்பட்டது. ஆனால் எட்டாவது வகுப்புவரை பள்ளித் தோழனாகவும், பள்ளியிலேயே முதலாவதாக வந்தும், பணவசதி இல்லாமல் படிக்க முடியாமல் போன அந்த ரத்தினத்தை (பெயரே அதுதான்) பார்த்ததும் மணிமேகலை அங்கேயே நின்றாள். பல் தெரியச் சிரித்து நின்றாள்.

    "என்ன ரத்தின அண்ணன்... என்னை வந்து பார்க்கணுமுன்னு ஒனக்குத் தோணல பாத்தியா?”
    "இதே கேள்வியை நானும் ஒன்கிட்டே கேட்கலாம் இல்லியா?"
    "அப்படீன்னா... நான் ஒன்னை மறந்துட்டால் நீயும் என்னை மறந்துடுவே இல்லியா?”
    "சும்மா தமாஷுக்குச் சொன்னேன். என் தங்கச்சிய, பள்ளிக்கூடத்துல தனக்கு வாங்குன நோட்டையும் சிலேட்டையும் எனக்குத் தந்த தங்கச்சிய, நான்தான் முதல்ல பார்க்கணும். அதுதான் முறை. ஆனால் முறை தெரியாத ஒன் அண்ணனால, வரமுடியாமப் போச்சு."
   “விவரமாச் சொல்லு."
   "ஒண்ணுமில்லம்மா... நான் விவசாயச் சங்கம் வச்சா ஒங்க அண்ணனுக்கு என்னம்மா? அரசாங்கம் கொடுக்கச் சொல்ற குறைந்த பட்சக் கூலி ரூ.7-25ஐ கேக்கறதுக்கும், குத்தகை சட்டத்தை அமல் செய்யுறதுக்கும் சங்கம் வச்சிருக்கோம், 'பள்ளுப் பறையன்களோட ஒனக்கென்னடா வேல' என்கிறார். பள்ளுப் பறையன்கள் மனுஷங்க