பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28 * இல்லம்தோறும் இதயங்கள்



இல்லியா? எல்லாம் ஒங்க அய்யா முகத்துக்காவ பார்க்கோம். இல்லன்னா சங்கதி வேற..."

    "கடைசிவரைக்கும் அதையே பாரு..."
    "எதுக்கும் ஒரு அளவு உண்டும்மா. இவருகிட்ட அடியாள் இருந்தால், எங்கிட்ட விவசாயத் தொழிலாளிங்க இருக்காங்க, ஒங்கண்ணன் சேரில குடிக்கப் போவலாம். நான் சேரில போயி, பணக்காரங்க ஒண்ணாச் சேருறது மாதிரி நாம ஏழைங்க ஒண்ணாச்சேரணுமுன்னு சொல்லப் போவக்கூடாதா? இப்போ நாட்ல ஹரிஜனங்களுக்கு, ஐயருங்க புகலிடம் கொடுக்கிறதும், புகலிடமாகிறதுமான காலம் வந்திருக்கு. ஒங்க அண்ணனோட கெட்ட காலம், அவரு இன்னும் அந்தக் காலத்தைப் புரிஞ்சிக்கல. அத புரிய வைக்க எவ்வளவு நேரமாயிடும்? நேற்று டிராக்டர் ஒட்டுன ராமசாமிய கை நீட்டி அடிச்சாராம். போனவாரம் பனையேறுற மாடக்கண்ணுவ செருப்பால அடிப்பேன்னாராம். அவராவது புதுச் செருப்ப, நல்ல செருப்ப வச்சி அடிக்கலாம். இவங்க பழைய செருப்ப வச்சி அடிப்பாங்க. நீ தப்பா எடுக்கப்படாது தங்கச்சி. வயிறு எரியுது. சரி உன் விவகாரத்தைச் சொல்லு, உன் பேக்டரியில தொழிலாளிங்களுக்கு சம்பளம் எப்படி?”
    மணிமேகலை, ஏரி மடை ஒன்றில் உட்கார்ந்து, ஏதோ பேசப் போனாள். பாமாவுக்குப் போரடித்தது. அண்ணி இப்போது நகரமாட்டாள் என்பதை அனுமானித்துக் கொண்ட பாமா, ஒரளவு அதற்குச் சந்தோஷப்பட்டவள் போல், "அண்ணி, எனக்குப் போரடிக்குது. நான் தோட்டத்துக்குப் போறேன். நீங்க வாங்க" என்று சொல்லி விட்டு, அவள் எங்கே "நானும் வாரேன்” என்று சொல்லி விடுவாளோ என்று பயந்தவள் போல, அப்படி அவள் சொன்னால்-அந்த வார்த்தைகள் கேட்காத தொலைவிற்குப் போகவேண்டும் என்று நினைத்தவள்போல பாமா திரும்பிப் பாராமலே நடந்தாள்.