பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                                சு. சமுத்திரம் + 29


    தென்னந்தோப்பு வரப்பு வழியாக-புல் மெத்தை விரித்த, வெட்டுக் கிளிகள் துள்ளி ஓடிய, வண்ணத்துப் பூச்சிகள் அள்ளிப் பருகும் மலர் கொண்ட அந்தத் தோப்புக்குள் நடந்தபோது, தோப்புக்கும் கரும்புத் தோட்டத்திற்கும் இடையே இருந்த வரப்பில், அவள் எதிர்பார்த்ததுபோல் சந்திரன் உட்கார்ந்திருந்தான். பாமாவுக்கு பயமாக இருந்தது. படபடப்பாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது. மாநிறம் என்றாலும் கவர்ச்சியுடனும் கட்டான உடம்புடனும், எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை கோபப்பட்டுப் பார்த்தறியாத குணபாவத்துடன் சிரித்த முகத்துடன் விளங்கும் அவனை இப்போதுதான் தனிமையில் சந்திக்கிறாள். கடந்த ஒருவார காலமாக பலர் நடுவே, அவனை வம்புக்கிழுத்தும், வக்கணை சொல்லியும் வாதாடியும், நிமிடத்திற்கு அறுபது வார்த்தைகள் பேசிய அவள், இந்த இரண்டு நிமிட நேரத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியாமல்-பேசத் தெரியாமல் அவனருகே நடந்தாள்.
    டிரான்ஸிஸ்டர் ரேடியோவைக் கேட்டுக்கொண்டிருந்த அவன், அதை 'ஆப்' செய்துவிட்டு, 'அக்காவ எங்கே' என்றான். பாமாவால் பேச முடியவில்லை. கையைத் துக்கி ஏரிக்கரையைக் காட்டினாள். அவன் புரியாதவன் போல் உதடுகளை கோணலாக்கியபோது "யாரோ ரத்தினமாம்... அந்த ஆள்கூட பேசிக்கிட்டிருக்காங்க. வந்துட்டேன்” என்றாள்.
    இருவருக்குமே, எதுவும் பேசத் தெரியவில்லை. சொல்லப் போனால் சந்திரன்தான் அவளைவிட அதிகமாக நாணினான். கோணினான். பிறகு, கரும்பு ஒன்றை ஒடித்து மூன்று துண்டாக்கி, ஒரு துண்டை வாயில் வைத்து பட்டையை உரித்துவிட்டு, அவளிடம்