பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ♦ இல்லம்தோறும் இதயங்கள்

 “அக்கா” என்று அவனும், “அண்ணி” என்று அவளும், மணிமேகலையின் இரு கரங்களையும் அழுந்தப் பற்றிக் கொண்டார்கள். வாய்கள் பேசாததை, கைகள் ஆணித்தரமாகப் பேசின.

3

மறுநாளும் மாலைப் பொழுது.

மணிமேகலை, ஒரு கடிதத்தை ரசனையோடு எழுதிவிட்டு, கவரில் போடப் போனாள். அப்போது மாந்தோப்பில் உட்கார்ந்து ஒரு நாவலைப் படித்துவிட்டு முன்னறைக்கு வந்த பாமாவிடம் “எம்.பி.பி.எஸ்ஸும், பி.ஈ.யும் ஒரே படிப்பு. எம்.பி.பி.எஸ்ஸுக்கு டாக்டர்னு பெயருக்கு முன்னால போடலாம். எஞ்சினியர் ஜெயராஜுன்னு போட முடியல பாரு” என்று மணிமேகலை சொன்னாள்.

“யாருக்கு அண்ணி லட்டரு? அண்ணனுக்கா?”

“நாம் ரயில் பெட்டியில் இருந்தத பார்த்துட்டும், அந்த மாமா ‘எப்பமா வந்தேன்னு’ கேட்டதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பியே, இப்போ நீ மட்டும் வேற மாதிரியா கேட்கிற?”

“அண்ணி, அண்ணி! நானும் அண்ணனுக்கு ரெண்டு வரி எழுதறேன். ஒட்டிடாதிங்க அண்ணி."

மணிமேகலை, சிறிது நாணினாள். பிறகு அப்பா அங்கே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு “எந்தப் பெண்ணும் புருஷனுக்கு எழுதற லட்டரை காட்டமாட்டாள். நீ கேட்கிறது அதைவிட அதிகம்.”